I am a part of the Universe, try to find is there a parallel. பெருவெளியின் பகுதியாய் ...

புதன், டிசம்பர் 29, 2021

Socioeconomic and Political Implications of Homeopathy | ஓமியோபதியின் மீதான சமூகப் பொருளாதார அரசியல் தாக்கங்கள்

குறிப்பு:
 George Vithoulkas   அவர்களுடைய The Science of Homeopathy என்னும் புத்தகத்தில் நிறைவு அத்தியாயம் மிகவும் ஈர்ப்புடையதாக இருந்தது. தமிழக, இலங்கைச் சூழலில் இல்லாத நெருக்கடி மேற்குநாடுகளில் ஓமியோபதிமீது உள்ளது. அந்தப் பின்புலத்தில் இதனை வாசிக்க வேண்டும்.

உலகத்தில் ஓர் கருத்துநிலையை(ideas) அறிமுகப்படுத்திவிட்டு மட்டும் அது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று செயலற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது போதாதது. மரபான வேரூன்றிய கருத்துக்களுக்கு வற்றுக்கு புதிய கருத்துநிலைகள் எப்போதும் சாவாலாகவே இருக்கும். இந்தக் காரணத்தினால் அவை மெதுவாகவும் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டே ஏற்றுக்கொள்ளப்படும். ஓர் அடிப்படை உண்மையின்மீது ஒரு கருத்நிலை உருவாயிருக்குமானால் எப்படியிருப்பினும், பல தடகளையும் தாண்டி காலப்போக்கில் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதுதான் ஓமியோபதி முகங்கொள்ளும் சூழ்நிலையாகும்.

ஓமியோபதியின் குணப்படுத்துமுறையில்  எங்கள் சமூகத்துக்குத் எதிர்காலத்தில் தேவையான உள்ளார்ந்த விழுமியங்கள் பொதிந்துள்ளன. இது ஆழவேரூன்றிய நோய்களைச் சிறப்பாகக் குணப்படுத்துவது என்ற நிலை மட்டுமல்ல. நோயாளியின் உட்கட்டுமானத்தைச் சீரமைத்து நோயெதிர்ப்புப் பொறிமுறையை துாண்வடிவிடும் ஓர் முறைமையுமாக இருக்கிறது. குழப்பநிலைகைளை ஏற்படுத்துகின்ற ... 
இந்த மெய்மைமட்டுமே எமது சமூகங்களில் பாரிய தாக்கங்களைத் தரவல்லன. எதிர்காலத்தில் ஓமியோபதி பாரியளவில் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் குணப்படுத்தும் முறையாக இருக்கிறது என்றுநாம் கற்பனை செய்வோமானால்

சமூகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் உயர்தரத்தில் உள்ள ஓமியோபதி மருத்துவர்கள் கிடைக்கும் நிலையும் இருக்குமானால்


(இந்த மொழிபெயர்ப்பை மெதுவாக நேரம் கிடைக்கும்போது செய்து முடிக்க...- தொடரும்)

சனி, ஜனவரி 28, 2017

vellumathi classical homoeo clinic: INTRACRANIAL HYPERTENSION WITH PAPILLEDEMA

vellumathi classical homoeo clinic: INTRACRANIAL HYPERTENSION WITH PAPILLEDEMA: A female patient aged 45 came with the complaints of severe headache with dull,tired vision. Diagnosis  * papilledema both side....

சனி, ஜனவரி 07, 2017

The Unprejudiced Observer: Cured Cases and discussion

The Unprejudiced Observer: Cured Cases and discussion: Wed, 29 Jul 2015, 8:48 PM - Murali Castro: Cured Cases ஆபத்தான நிணநீர்ச் சுரப்பி வீக்கம் (HODGKIN’S DISEASE) ( புற்று ) மற்றும...

The Unprejudiced Observer: சல்பர் பிரபுல் விஜயகர்

The Unprejudiced Observer: சல்பர் பிரபுல் விஜயகர்: சல்பர் பிரபுல் விஜயகர் சல்பர் உங்களுக்கு மிகவும் நட்பான பக்கத்துவீட்டு கார் ஓட்டுநராகவோ அல்லது பால்காரராகவோ அல்லது வெத்த...

bhairavihomoeopathy: நானும் ஹோமியோபதியும்

bhairavihomoeopathy: நானும் ஹோமியோபதியும்

பாலா ஹோமியோபதி: நானும் ஹோமியோபதியும் -- மரு.கோவிந்தராஜ் திருப்பூர...

பாலா ஹோமியோபதி: நானும் ஹோமியோபதியும் -- மரு.கோவிந்தராஜ் திருப்பூர...: எனக்கு ஹோமியோபதி என்ற மருத்துவ முறை அறிமுகம் ஆனது 1980 ம் ஆண்டுகளில் எனது நண்பர்கள் மூலம்.  அது ‘’’சும்மா இனிப்பு மிட்டாய் மாதிரி’’ என...

புதன், நவம்பர் 23, 2016

டச்சுக்கோட்டையும் கடலைக்காரிகளின் பேரப்பிள்ளைகளும்
 - மாமூலன்

டச்சுக்கோட்டையும் கடலைக்காரிகளின் பேரப்பிள்ளைகளும்


மாமூலன்


புக்காரா விமானத்தின் பீப்பாய்க் குண்டுகளும் செல்களும் கிபீர்களும் இடித்துவிட்டவை, கொண்டுபோய்விட்டவை போக, மீதமாக உள்ள கட்டிடங்களில் யாழ் குடாநாட்டின் ஆட்கள் வாழ்வை நடத்திக் கொண்டிருந்தார்கள். யாழ் நகரத்தின் தெருக்கள் பகலிலும் பதுங்கிப் பதுங்கி இயங்கின. இரவிலோ காணாமல் போய்விடப் பழகிக் கொண்டிருந்தன. துணிச்சலான சிலர் ‘மினி’ வான்களை ஓட்டினர். அவை பெரும்பாலும் சிறிய “ரோசா” ரக யப்பானியத் தயாரிப்பு வண்டிகளாகத்தான் இருந்தன. அரசு போக்குவரத்து வண்டிகளைச் சொல்லத் தேவையில்லை, அவை எப்போதோ காணாமல் போயிருந்தன. சிறிய வண்டிகளாயின் போகும் வழியில் ‘பொம்மர்’ அடித்துக்கொண்டிருந்தால் அவசரத்துக்கு ஆலமரமோ புளியமரமோ தஞ்சம் கொடுப்பதற்கு அருகில் இருந்தால், சின்ன வான்கள்தான் அவற்றின்கீழ் ஓடி ஒளிந்துகொள்ள கூடிய வசதியானவையாயிருந்தன.

உலகத் தமிழாராச்சி மாநாடு, அப்பல்லோ சர்க்கஸ், அவ்வப்போது ‘கார்ணிவல்’ என்று குடாநாட்டுத் தமிழரின் கலை, பண்பாட்டுக் கூடமான இடம் ‘முத்தவெளி’. இந்த அரை வட்ட அல்லது குதிரை லாட வடிவ மைதானத்தின் நடுவமாக ஒல்லாந்தர் கட்டி விட்டுப் போய்விட்ட கோட்டை, யாழ் நகரத்தின் மையப்புள்ளியாக இருந்துகொண்டிருந்தது! ஐந்து முனைகளையுடைய கோட்டையின் தென்முகத்தில் கோடு வரைந்து மறித்தது போல் கிழக்கு மேற்காக பண்ணைக் கடல். உண்மையில் அது ஓர் கடல் என்று சொல்வதும் சரியல்ல. காவிரி ஆற்றைப்போல, அந்த அளவிற்கு அகலம் உடைய கடலின் வழிந்தோடு பகுதி என்றுதான் பண்ணைக் கடலைச் சொல்லவேண்டும். பாக்கு நீரிணைப் பகுதிக்குள் இருந்து தீவுகளுக்கு ஊடாக ஊடுருவி ஆனையிறவுக் குடாவிற்குள்ளால் தமிழ்களில் போர்க்கால வாழ்வில் புகழ்பெற்ற பூநகரி சங்குப்பிட்டி இறங்குதுறைகளின் கரைகளைத் தொட்டுக் குதிரை முனைக்கு ஊடாக மீண்டும் மன்னார் - ராமேசுவரம் கடலில் தொடுக்கும் கடல்பரப்பு. இந்தப் பண்ணைக் கடல் பகுதி முழுவதும், மூன்றுபாகத் தாங்கு தடிகளால் தாங்கித் தாங்கி மீனவர்கள் தங்கள் பல்வேறு படகுகளையும் ஓட்டுவதையும் பார்க்கமுடியும். அதனால்தானோ என்னவோ அந்தக் கடற்பரப்பு முழுதும் தடிக்கம்புகள் நாட்டப்பட்டு களங்கட்டி வலைகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிறைந்திருக்கும். பண்ணைக் கடலின் வடபுறத்தின் உள்ள யாழ் நகரின் கரையையும் தென் பகுதியில் இருக்கும் அல்லைப்பிட்டி முதலான தீவுத் தொடரின் நிலத்தையும் இணைக்கும் இரண்டு கிலோ மீற்றர் பண்ணைப் பாலம் வடக்குத் தெற்காகச் செல்கிறது.

பண்ணைப் பாலம் யாழ் டச்சுக் கோட்டையின் தென்மேற்கு மூலையை ஒட்டியே கடலில் இறங்குகிறது. இலங்கை ராணுவத்துக்குச் சீற்றம் அதிகமாயிருக்குமானால் தீவுப்பகுதிப் போக்குவரத்து அனுபவம் நடுக்கம் அதிகம் தருவதாய் இருந்துவந்தது. கோட்டையில் இருக்கும் ராணுவம் பலகாலமாக கொட்டகைபோட்டு பண்ணைப் பாலத்தருகில் காத்திருந்து கழுத்தறுத்து வருகிறது. இது ஒன்றும் இப்போது வந்ததல்ல. அந்தக்காலத்தில் இலங்கைப் பொலிஸ் கொட்டில் போட்டிருந்தது. அது கள்ளக் கடத்தல் செய்வோரைப் பிடிப்பதற்கு என்பதாக இருந்தது. பிறகு இந்தியாவின் அமைதி தந்த படையும் இங்கே கொட்டாய் போட்டது. தற்போது மீண்டும் இலங்கை ராணுவம் இருக்கிறது. டச்சுக்காரர் கோட்டை கட்டிய நோக்கமே இந்த காவல்தான், கண்காணிப்புத்தான்.


தற்போதோ, அப்போதுதான் கீழே விழுந்து புகைந்துகொண்டிருக்கும் எருமைச் சாணியாக மாறியிருக்கும் யாழ் டச்சுக் கோட்டைக்கருகில் காவலரண் இல்லை. அதைச்சுற்றியும் உள்ள கட்டடங்களிலும் முத்தவெளி என்ற நிலம் எங்கும் பரிதிக் கதிர் விரிக்கும் திசை நுனியில் உள்ளது போல் விடுதலைப் புலிகளின் பதுங்குமிடங்களும் பதுங்குழிகளும் இருக்கின்றன. கோட்டையை நோக்கி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்தத் தாக்குதல் யாழ் கோட்டை முற்றுகை என்று அழைக்கப்பட்டது. ஊடகங்களுக்கு அருமையான தீனியும் கிடைத்து வந்தது. முன்னொரு காலத்தில் - 1986 இல் இதே கோட்டைக்குள்ளிருந்த சிறிலங்காவின் காவல்துறையை விரட்டி அடிக்க அனைத்துப் போராளி இயக்கங்களும் ஆளுக்கொரு திசையைப் பொறுப்பெடுத்து, ஒன்றுபட்டு, திசைக்கெல்லாம் ‘சென்றி’ வைத்து நடத்தி மீட்கப்பட்டதுதான் இந்தக் கோட்டை. இப்போதோ, இலங்கை இராணுவத்திடம் இருந்து கோட்டை மீட்டெடுக்கப்படவேண்டும். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும்தான் இயக்கமாக ஆகி, மாறிவிட்டிருந்தது!

யாழில் ஒரு ஊடகத்தில் கடைநிலை ஆசிரியப் பிரிவில் வேலைசெய்து வந்தேன். எனக்கு நேர்காணல் வைத்த பதிப்பாளரின் பிரதிநிதி அருகில் இருந்த பதிப்பாளரிடம் “வீ கேன் மேக் யூஸ் ஓஃவ் ஹிம்” என்று காதில் சொன்னது எனக்கு விளங்கியிருந்தது. அதை வைத்துக்கொண்டு, ஆசிரியப் பீட உள் அரசியலை அடித்துக்கொண்டு முன்னேறி மேல்நிலை ஒன்றை அடையும் கனவு எனக்கு இருந்ததில்லை. இந்தளவிற்கு குடாநாட்டின் பத்திரிக்கைகள் பெரிதானவையும் அல்ல. அதுவும் போர் நடந்த நாட்களில் குடிசைக் கைத்தொழிலாகத்தான் இயங்கின. நீண்ட நாளைக்குப் பின்னர் நாடு திரும்பிய எனக்கு வேலை வெட்டி எதுவும் இல்லை என்பதால் என்னை கல்லூரி நண்பன் தோமா அழைத்துச் சென்று வேலைக்குச் சேர்த்துவிட எண்ணினான். எனக்குத் தெரிந்தது எண்ணும் எழுத்தும் அல்ல. வரிக்குவரி எழுத்து. அது புனைவும் அல்ல என்று புரிந்து வைத்திருப்பான் போல

இழுத்துக்கொண்டுபோய்ப் பத்திரிக்கையில் செய்தி எழுதும் வேலையை எடுத்துத்தந்தான். 

1990 யூன் மாதம் 11ஆம் திகதி அமைதிப்பேச்சு உடையத் தொடங்கியது. 1983 இற்குப்பின்னர் முதற்தடவையாக, அல்லது எப்போதும்போல…அமைதி உடைந்தது. மட்டக்களப்பில் பொலிஸ்நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுதான் அந்த உடைவுக்குக் காரணம் என்றார்கள். யூன் 13 ஆம் நாள் தலைக்குமேல் உலங்குவானூர்தி சுற்றிச்சுழன்று அடித்துக்கொண்டிருந்தது. வெடித்துக் கொண்டிருந்த பெருந்துளை எந்திரத் துப்பாக்கி நிலத்தில் யாரைக் குறிவைக்குமோ என்பது தெரியாமல் இருந்து. 

“ஆமி வாறானாம்!” என்று கதை பரவத்தொடங்கியது. சனங்கள் இனியும் இருந்தால் சரிப்படாது என்று தங்கள் வசதிக்கு, வாய்க்கும் திக்குக்கு நகர்ந்து கொண்டிருந்தார்கள். காங்கேசன்துறை வட்டகையே வெறுமையாகத் தொடங்கிக் கொண்டிருந்தது. இது ஒரு நாளில் நடந்து முடிந்து, ஓர் திரைப்படக் ‘கிளைமாக்சை’ப் போல, ஓர் புள்ளி நோக்கி குறிப்பாக நகர்ந்து நிறைவடையும் சமாச்சாரமல்ல. அது- அந்த ஓட்டம் தொடங்கியது மட்டும்தான் அன்று. முடிவடைந்தது எப்போது என்று இன்னும் தெரியாது.

அனைவரும் வெளியேறியபின்னரும் - அப்படிப் பலரும் சொல்லிக்கொண்டிருக்கவும் - ஆங்காங்கே வீடுகளில் “ஊரை விட்டுவிட்டு வரமாட்டேன்” என்ற முதியவர்கள் தங்கி இருந்தார்கள். “எங்கே போய், என்ன செய்வது?” என்றவர்களும் தங்கியிருந்தார்கள். “ஆமி வந்து எங்களை என்ன செய்யும்? - செய்யப்போகுது” என்றவர்களும் தங்கி இருந்தார்கள். இப்படிப்பலரும் …


வெளியேறி வந்தபின்னரும் பலரும் தாங்கள் விட்டுவிட்டு வந்த பொருட்களை எடுக்கவோ…. தப்பி நின்றுவிட்ட ஆட்டைத் தேடியோ, வரும்போது கையில் வந்து அகப்படாத பூனைக் குட்டியைத் தேடியோ… போய் வந்துகொண்டிருந்தார்கள். சிறுவர்கள் - இளையோர் பல்வேறு நோக்கங்களை முன்வைத்துப் போய் வந்தார்கள். பலாவில் இப்போது பழங்கள் பழுத்திருக்குமா என்றவர்களும்…தேங்காய் விழுந்திருக்கும்… எடுத்துவருவோம் என்றவர்களும் ஊரைப்பார்க்கப் போகிறேன் என்று காதலருடன் சைக்கிள் பவனி சென்று வந்தவர்களும்… அனைத்தும் உண்டு. இராணுவத்தின், போரின் தாக்குதல்களும் உயிர்ப்பயமும் மீறி அதையும் சுழித்து வாழ்க்கை நகரும்தானே!
இவர்கள் அனைவரும் அன்றாட வாழ்வில் நிகழும் சிறிய விருப்பங்கள் குறித்துச் சென்று வந்தாலும் - அனைவருமே இராணுவத்தால் வரும் உயிர் ஆபத்தை தாண்டிக் கடந்து அல்லது வெட்டி ஓடி அல்லது மறைந்து ஒழிந்துதான் இவ்வளவையும் செய்து வந்தார்கள்.
இலங்கையின் வடக்கோ வடக்குக் கரையோரமான காங்கேசன் துறை வட்டகையிலிருந்து தெற்கு நோக்கியும் தென் மேற்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் தான் நகர்வுகள் இருந்தன. நேர் தெற்கில் செல்லவும் பலரும் விரும்பவில்லை. பலாலி முகாம் இராணுவம் வெளியேறி வந்தால் மேற்காக வந்தால், சரியாக தெல்லிப்பளையிலோ மாவிட்டபுரத்திலோ மல்லாகத்திலோ வைத்துக் கழுத்தில் பிடிப்பான் என்பது தெரிந்தே இருந்தது. அதனால்தான் அனைவரும் நேர் தெற்கு இல்லாமல் மேற்காக தென்மேற்காக நகர்ந்தார்கள். இளவாலை, பண்டத்தரிப்பு. சில்லாலை, விளான், சங்கானை, மானிப்பாய், ஆனைக்கோட்டை என்று தென்மேற்கின் அனைத்துச் சாத்தியமான இடங்களையும் நோக்கி நகர்ந்தனர். அப்படியே நேராகக் கடலில் குதித்து 18 கடல் மைல் நீந்தினால் தமிழகமும் வந்துவிடும். பிற்பாடு வள்ளங்களில் ஏறி இந்த மக்கள்தான் தமிழ்நாட்டிற்கும் சென்றார்கள். ஒரே முனைப்பாக வெளியேறி வன்னி, கொழும்புத் தலைநகர், கிழக்குப் பகுதி என்று சென்றவர்களும் வெளிநாடுகளுக்கே புலம்பெயர்ந்து போய்விட்டவர்களும் உண்டுதான்.


இந்த உள்ளுர்ப் புலம் பெயர்வில், நான் எனக்குத் தெரிந்த இளவாலைக்குப் போயிருந்தேன். நான் கல்வி கற்றிருந்த பாடசாலையின் சுற்றுப்புறத்தில் தங்க முயற்சித்தேன். உண்மையில் எனக்கு தலையும் காலும் புரியவில்லை எனலாம். நான் ‘அமைதி காக்கும்’ படையைச் சந்தித்திருக்கவில்லை. 1985 இல் புறப்பட்டு மத்திய கிழக்கிற்கு வேலைக்குச் சென்று விட்டு விடுமுறைக்கும் வராமலேயே அங்கேயே தங்கியிருந்தேன்.

எப்போதாவது தொலை பேசினாலும் “அய்யோ! இங்கே வரதே! இங்கே சண்டை. வரவே வராதே” என்பதையே அம்மா திருப்பியும் திருப்பியும் சொல்லிக்கொண்டிருந்தார். 1990 இல் அமைதிப்படை இந்தியா திரும்பியதும் சண்டை முடிந்திருக்கிறது. அமைதி வந்துவிட்டது. இதைச் சாட்டாக வைத்து நான் ஊரில் - இலங்கையில் - யாழ் மாவட்டத்தின் வடக்குக் கரையில் உள்ள எனது ஊரில் வந்து இறங்கினேன். இறங்கி எண்ணி எட்டு நாளிலேயே, எதுகை மோனைக்காகச் சொல்லவில்லை, ‘எண்ணி எட்டே நாளில்’ சண்டை தொடங்கிவிட்டது. இப்போது ஓட்டப் படலம். ஓடுவது என்பதன் பொருள் எனக்குப் புரியவேயில்லை. முதல் நாள் இரவு நடந்த கூத்து நிகழ்வைப் பார்த்து வந்து அதிகாலையில்தான் உறங்கியிருக்கிறேன். யூன் 14 ஆவது நாள் மதியம் “டப டப வெனச் சத்தம்”. அம்மா வந்து தட்டி எழுப்பினார்.

அய்யோ தம்பி” என என்னை உலுக்கி எழுப்பினார்.
எழும்பு! ஓடு ஓடு…”இது ஓர் தாயின் குரல் என்பதை 2 கிலோ மீட்டர் மிதிவண்டியை ஓட்டிச் சென்ற பிறகே உணர்ந்தேன். எனக்கு எவ்விதமான போர்க்காலப் பட்டறிவும் முறையாக இருக்கவில்லை என்பதனால் அம்மா சொன்ன “ஓடு” என்பதைத் தேவ வாக்காக எடுத்து சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தேன். சிந்தனை எனக்கு இல்லை. அரைத்தூக்கம். பின்னர் சில நிமிடங்களில் விழித்தபோது காங்கேசன் துறை - யாழ்ப்பாணம் வீதியில் மாவிட்டபுரம் தாண்டி தெல்லிப்பளைக்குச் செல்கிறேன் என்பது புரிந்தது. எனது மிதி வண்டி வேகம் மிகவும் மெதுவாகப் போனது…உண்மையில் எனக்கு எதுவும் புரிந்திருக்கவில்லை என்பதுதான் இந்த இடத்தைச் சரியாகச் சுட்டப் பயன்படும் மொழிப் பயன்பாடாயிருக்கும். எங்கு போகிறேன். இது எனது ஊரை விட்டு ஏன் இந்த ஓட்டம் - என்பது விளங்கவேயில்லை!

தாயும் தங்கைமாரும் மானிப்பாயில் போய் தங்கியிருந்தார்கள் என்பதை அன்று இரவு எட்டுமணியானபோது கண்டு பிடித்தேன். இந்த மரத்தடி அகதி வாழ்க்கை 1990 முதல் தொடங்கியதுதான். இந்தத் தொடர்ச்சியில்தான், இளவாலையில் வந்து தங்கிய என்னைப் பின்னர் எனது நண்பன் தோமா கொண்டுபோய்ச் செய்தித் தாளில் சேர்த்தான் என்பது.

இப்போது ஒவ்வொரு நாளும் பிற்பகலில் புறப்பட்டு யாழ் நகர் செல்வதும் பின்னர் அதிகாலையில் இளவாலை நோக்கி வருவதும் தொழில் முறைமை ஆனது. இன்று வரை எனது தொழில் எதுவுமே பகலில் அமைவதில்லை. அதைச் சிரமப்பட்டுப் பகலிற்கு மாற்றினாலும் தொடர்வதில்லை. ஆக நான் ஓரு இரவின் மைந்தன் என்று மனதைத் தேற்றிக்கொண்டு நிறைய நாள்ஆகிவிட்டது. ஆனால் இலங்கையில் இருந்த நாட்களில் இந்த இரவு விளையாட்டு உயிரைப் பணயம் வைப்பது. உறக்கம் தவிர்த்தலும் குண்டும் விமானத்தாக்குதலும் பழக்கப்பட்டாலும் நாய்த் தாக்குதலுக்கு நான் கடைசி வரை பழக்கப்படவேயில்லை. ஓர் விமானம் குண்டு போட வருவதாயின் அது வரும் திசையில் இருந்து எதை நோக்கி வருகிறது? அது வேகத்தைமாற்றி திரும்பும் திசைமாறும் வழிமுறையிலிருந்து தாக்குதல் எல்லைகள் எந்தப் பகுதியாய் இருக்கலாம் என்று பல ஊகங்களைச் செய்து கொள்ளலாம். ஏதாவது மறைவைத் தேடலாம்.
ஆனால் நாய் இருக்கிறதே! அதை எந்த ஊகத்திலும் அடக்கமுடியாது. ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து இரவு - அதிகாலையும் மூண்டரை நாலு மணிக்கு பேப்பர் அச்சுக் கூடத்துக்குபோகவும் நாங்கள் வெளிக்கிடலாம். அந்தச் சாமத்திலும் வெளிக்கிட்டு சைக்கிள் மிதி. என் தங்கை கல்யாணி விட்டுவிட்டு போயிருந்த ஓர் முக்காற் சையிக்கிள் என் வாழ்க்கை உறுதுணை. அதை மிதித்துக்கொண்டு போனால் நடப்பதைவிடச் சற்று வேகமாகப் போகும். மானிப்பாய் மருத்துவமனையைத் தாண்டி சண்டிலிப்பாய் வழியாகப் போகும் ரோட்டில் போகத்தொடங்கியதும் ஒரு நூறு மீற்றர் தூரத்தில் கொஞ்ச நாய்கள் துரத்திக்கொண்டு வரும். அது திடீரென்று காலடிக்குள் ஓடிவந்து குரைக்கும் குரை இருக்கிறதே அந்தச் சாமத்தில் குலை நடுங்கும். எங்கே இராணுவம் விமானத்தில் வந்து தாங்குதல் நடத்திவிடுமோ என்ற பயத்தில் விளக்கு ஒளிகள் அனைத்தும் அணைத்தபடி கைலாம்புகளைக்கூட மறைத்து வைத்தபடி சனங்கள் உற்கும் வேளை. இந்த நாய்களிடம் இருந்து தப்பிக்க அந்தப் பகுதி வந்ததும் முடிந்தவரை வேகமாகச் சையிக்கிளை மிதிப்பேன். நாய் துரத்திக்கொண்டு கிட்ட வரும் வரை மிதித்துக்கொண்டு போவேன். குரைத்துக்கொண்டு நாய்கள் கிட்டவாக வந்ததும் காலைத் தூக்கி சைக்கிள் கைப்பிடியில் வைத்துக் கொள்வேன். இதுதான் பெரும்பாலும் கைகொடுத்தது. சில நாளில் நாய்களே இருக்காது. கும்மிருட்டு. மின்சாரம், வீதி விளக்கு அற்ற நிலை. யாரும் நடமாடுவதில்லை. என்னைப்போன்ற சிலரும் புலிகளின் வாகனங்களுமே இந்த இரவுகளில் வீதிகளில் நடமாடும்.

அதைத் தாண்டினால் சண்டிலிப்பாய் ரோட்டிலிருந்து விளாவெளிக்குள்ளால் சேந்தாங்குளம் போகும் ரோட்டில் போனால் இளவாலை. இந்த இளவாலை-சேந்தாங்குளம் ரோட்டு குடாநாட்டிலேயே அதிகம்நீளமான, நேரானது. சண்டிலிப்பாய் ரோட்டிலிருந்து பிரியும் சந்தியில் சைக்கிள் கரியரில் ஏறி நிண்டு பார்த்தால் சேந்தாக்குளம் கடல் தெரியும். அப்படி ஒரு நேர் கோடு. பண்ணைப்பாலம், வேலணைப்பாலம், வல்லை வெளி ரோட்டுக்களைவிடவும் இது நேர் கோடு. இதில ஒரு ஆபத்தும் இருக்கிறது. லாபமும் இருக்கிறது. இரவில் துரத்தில் வரும் வாகனங்களைப் பார்த்து தூரத்திலேயே ஓடி ஒளிய முடியும். ஆனால் பகலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தப்பாமல் தெரியும். விளாவெளியின் சுடலையும் அதன் அந்தக்கால பேய்களும் பிரபலமானவை. ஆனால் துரத்தி என்னைக் கொண்டுவந்து விடும் நாய்களால் பேய்களைப் பற்றிய பயம் இன்றி நான் சைக்கிளில் போவேன்.

கோட்டையில் முற்றுகை அடிபாடு போய்க் கொண்டிருந்தபடியால் குண்டு வீசுவதற்கு இராணுவ விமானங்கள் கோட்டையின் சுற்றாடலைத்தான் குறிவைத்தன. அதனால் இரவில் நான் அதிகாலையில் போகும் வழிகள் பாதுகாப்பானவை. பகலில் மக்கள் நடமாடத் தொடங்குவார்கள். அந்த நேரங்களில் வந்து சந்தைகள் நடமாட்டமுள்ள பகுதிகளில் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி குண்டு வீசினார்கள். பீப்பாய்க் குண்டுகளைத் தள்ளினார்கள். கலிபர் துப்பாக்கிகளால் சுட்டார்கள். எங்கு ஏது என்ற வரையறை இல்லாத தாக்குதல். பலாலி முகாமிலும் காரைநகர் கடற்படை முகாமிலும் யாழ் கோட்டையிலும் முடங்கியிருந்த ராணுவத்திற்கு தாக்குதல் வழிகள் வான் வழிகளாகவே இருந்தன. அதைவிடச் சிறப்பான வழிகளும் வைத்திருந்தார்கள். அவைதான் செல்கள். ‘செல்’ என்ற இந்தச் தனிச் சொல்லில் விளக்கிவிடமுடியாத இந்தச் சொல்லில் புரியமுடியாத கடுமையும் கொடூரமும் கொலைவெறியும் அதில் பொதிந்திருக்கிறது - தமிழ் மக்கள் மனதிலும்.

வேலைக்குப் போகும் போது ஒரு மாலையில் இதே சண்டிலிப்பாய் வீதியில் விளா வெளியால் வந்து திரும்புகிறேன். பின்னால் தூரத்தில் நிறையக் ஹெலிகளின் சத்தம். பயத்தில் படக்கென்று சைக்கிளை விட்டு இறங்கி உருட்டிக்கொண்டு வீதியோரத்தின் வேலியின் மரங்களை ஒட்டிப் பதுங்கப் போகிறேன். சண்டிலிப்பாய் வீதியில் இருந்து பார்த்தால் பண்டத்தரிப்புப் பக்கமாக வடமேற்கே காரைநகர் நோக்கி பதினைந்துக்கு மேற்பட்ட ஹெலிகள் மிகத் தாழ்வாகப் போய்க்கொண்டிருந்தன. என்னைப்போலவே பலரும் பதுங்கினவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் வந்து அந்த ஊர்வலத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.


நானும் மெதுவாக வீதிக்கு வந்து, இனிப் பயம் ஏதும் இல்லை என்பதனால் சைக்கிளை மானிப்பாய்ச் சந்தியை நோக்கி மிதிக்கிறேன். கொஞ்சத்தூரம் போயிருப்பேன். வீதிக்குக் குறுக்கே பாய்ந்து வந்த ஓரு நடுத்தர வயது ஆள் என்னை மறித்தார். என்னை விசாரிக்கத் தொடங்கினார். என்னுடைய பதில்கள் தோற்றம் அவருக்குத் திருப்திதரவில்லை. இவர் ஏன் என்னை விசாரிக்கிறார் என்ற எரிச்சல் என்னிடம்.

பிறநாடுகளில் வசித்துவிட்டு வந்த எனக்கு யாழ்ப்பாணத்தின் சொற்களில் எந்தச் சாயலும் இல்லாத பல சொற்கள் கலந்துவிட்டிருந்தன. எனது ஆடைப் பாணி சாதரணம் என்றாலும் மத்தியகிழக்கில் வாங்கிய ரீ சேர்ட்டிற்கும் யாழப்பாணத்தில் அப்போது கிடைப்பனவற்றிற்கும் ஆயிரம் வேறுபாடு இருந்திருக்கும்.

என்னை மறித்தவருடன் இருவர் சேர்ந்து கொண்டார்கள்.
அண்ணை எந்த இடம்” எண்டு தொடங்கியது... இப்போது
வா! சென்றிக்கு” என்று மாறியிருந்தது.
பின்னால் ஒருவர், “பணிமனைக்கு கொண்டு போ” என்றார். என்னை அழைத்துக்கொண்டு புலிகளின் சிறிய பணிமனைக்கு கூட்டிச் சென்றனர். அது சுண்ணாம்புக் கட்டடம். பழைய அரண்மனை போன்ற வீடு. ஒரு அரை மணித்தியாலம் இருக்கலாம். நான் அமர்ந்திருந்தேன்.

நான் வேலைக்கு போகவேணும். யாரையாவது வரச்சொல்லுங்கள்” என்றேன்.
பிறகு உள்ளிருந்து எனது வயதைவிட சற்றுக் குறைவான இளைஞன் வந்தார். அவர் கையில் கட்டியிருந்த மணிக்கூடும் சிறிய கட்டம்போட்ட சட்டையை இன் பண்ணியிருந்ததும் வழித்திருந்த முகம் அவரை யார் என்று சொல்லியது. 

“என்னண்ணை என்ன பிரச்சினை.” இது தெரியாத மாதிரி என்னையே கேட்கும் விதம். 

எங்கேயோ பறந்து ஊர்வலம்போன ஹெலிகளையும் சற்றும் அந்த இடத்திற்கு பொருத்தமற்ற தோற்றத்தில் வேலியோரமாக நின்ற கொண்டிருந்த என்னையும் யாரோ தொடர்பு படுத்திவிட்டார்கள். நான் சிரித்துவிட்டுச் சொன்னேன். 



தம்பி, சவுதியில் இருந்துவிட்டு நான் இப்பதான் வந்தனான். எனக்கு இங்க வானம் பூமி தெரியாது.”
மேலும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னேன். பத்திரிக்கையில் வேலையைச் சொன்னேன். யாழ் பெரியாஸ்பத்திரி அடிபட்டுச் செயலற்றுப் போய்விட இப்போது மானிப்பாய் மெமோரியல் ஆஸ்ப்பத்திரிதான் இயங்கிக்கொண்டிருந்தது. கோட்டை அடிபாட்டில் காயம்படுபவர்கள்கூட அங்குதான் வந்து குவிந்தார்கள். அங்கு பல்வேறு உதவிகளுக்குத் தொண்டர்கள் தேவை என்பது அனைவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. நான் அங்கு தொண்டுப் பணிக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். அதை லேசாக அந்த தம்பியிடம் சொன்னேன்.

அப்போ என்னைக் கூட்டி வந்த ஆள் எனது கைப்பையைக் காட்டினார். எனது பை கிழிந்து போன ஓர் ‘கொட்றாயில்’ நீளக் காற் சட்டையைப் பிரித்து அதை மாற்றி சிறி பையாகத் தைத்து எடுத்தது. தையல் வித்தைக் காரியான எனது தாயாரை சிரமப்படுத்தி எனக்கு ஏற்படுத்தி வைத்திருந்த ஓர் தோள்ப் பை. இப்பதான் உறைத்தது. அனைத்தையும்விட இந்தப் பை என்னை அவர்களுக்கு வேறுபடுத்திக் காண்டியிருக்கும். அந்தத் தம்பி சொன்னார்…

“இதென்ன பை அண்ணை”

நான் பையைத் திறந்து காட்டினேன். அதில சில புத்தகங்கள், எழுதும் தாள், கொப்பி ஒன்று என்பன போன்று… எனது சாப்பாட்டு - டிபன் பாக்ஸ். இப்போது கூட்டிவந்த ஆள் அந்தப் பெட்டியை - சாப்பாட்டுப் பெட்டியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். எனக்குச் சிரிப்பு வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் அதைத் திறந்தேன். அம்மா வைத்திருந்த குத்தரிசிச் சோறும் கத்தரிக்காய் வெள்ளைக் கறியுடன் ஓர் முட்டையும் இருந்தது. இத்தோடு அவர்கள் கண்கள் சாந்தமடைந்திருந்ததைக் கவனித்தேன். 

“அண்ணை நீங்கள் போகலாம்.” பிறகு கிட்ட வந்த அந்தத் தம்பி சொன்னார்.
அண்மைக் காலமாக நிறய வேற ஆக்கள் நடமாட்டம். சிலபேர் ‘வோக்கி’யோடயும் பிடிபட்டிருக்கினம். அதாலதான் நாங்கள் சாப்பாட்டுப் பெட்டியெல்லாம் திறந்து பார்க்கவேண்டியிருக்குது. மன்னிச்சுக்கொள்ளுங்கோ” 
இல்ல பரவாயில்ல தம்பியவை”

ஏறி சைக்கிளில் இருந்தேன். சிலநிமிடங்களில் மானிப்பாய் ஆஸ்பத்திரி. வேலைக்கு போகமுதல் ஒரு மணித்தியாலம் அளவுக்கு மணித்தியாலம் மானிப்பாய் ஆஸ்பத்திரியில் தொண்டுப் பணி. அது நானானக மனத்திருப்திக்கு தேடிப் போனது. தொண்டுப்பணிக்குரிய பொறுப்பானவரிடம் போனால், முதல் நாள் அங்கேயும் கிடுக்கிப்பிடி கேள்வி பதில்தான். இப்போது அவர்களுக்கு என்முகம் பழகிவட்டது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வேலை. பெரும்பாலும் காயப்பட்டிருப்பவைக்கு சாப்பாடு தீத்துவது. பக்கத்தில் இருந்து கதைப்பது. அல்லது அவர்களுக்கு அருகில் இருப்பது. சிலவேளைகளில் இளனியை வெட்டிக்கொடுப்பது. இப்படிச் சின்னச் சின்ன வேலைகள். 

எனது குற்ற உணர்வின் அடிப்படையிலேயே தொண்டுப் பணிக்குப் போயிருந்தேன். எந்தக் கட்டாயமும் இல்லை. கட்டாயத்தில் எதையும் செய்யும் குணமும் எனக்கும் இல்லை. இந்தப் போர்கள் எல்லாம் நடக்கையில், சனங்களெல்லாம் ஓடி அலைகையில், வெளி நாடுகளில் இருந்துவிட்டேன். தற்போது வந்து இறங்கியிருக்கையில், நடப்பனவெல்லாம் கனவுகளாகவும் சனங்கள் பட்டிருக்கும் சிதைவும் மனத்தின் சுமையாகவும் மாறியிருந்ததில் வியப்பில்லை. ஏதாவது செய்யலாம் என்றால் சண்டைக்குப்போவது மட்டும் அல்லவே. அதனால் இந்த மருத்துவமனைத் தொண்டு.

இன்று கோட்டை அடிபாட்டில் குண்டுபாய்ந்திருந்த ஓர் பதின்ம வயது இளைஞன் அருகில் இருக்கும் பணி. அவருக்கு வயிற்றின் எதோ ஓரு பகுதியில் குண்டு பாய்ந்து அதை எடுத்து விட்டுக் கட்டுப் போட்டிருந்தார்கள். காயம்படுவோருக்கு எவ்வித வலிநீக்கி மருந்துகளும் தேவையான அளவில் அங்கே இருக்கவில்லை. சாதாரண வலி நீக்கிகளையே கொடுத்து வந்தார்கள். அவற்றின் உதவியில் உறங்குபவர்கள் சிறிது நேரத்திலேயே விழித்துக் கொள்கிறார்கள். வலியை நீக்க கவனத்தை திசைதிருப்ப முயற்சிப்பார்கள்.
பேப்பரைப் படியுங்கோண்ணை” பேப்பரை எடுத்து வாசித்தேன். வந்திருந்த நாலு பக்கத்தில் ரெண்டு பக்கம் தாண்டும்போது..


அந்த ரேடியோவைப் போடுங்கோண்ணை… ஓ செய்தி முடிஞ்சுதோ…”
அண்ணை! இதில கொஞ்சம் தடவிவிடுங்கோ.” வயிற்றையும் முதுகையும் சுத்திச் சுத்திக் கட்டுப் போட்டிருந்தார்கள். இடைப்பகுதியில் ஓர் இடைவெளி இருந்தது. அங்கே தடவும் படி கேட்டார். தடவும்போது தோலில் ஏற்படும் அந்த உரசல் எப்படியும் நரம்புகளின் உணர்வுமுனைகளைத் திசை திருப்பும். அதற்கு இந்த தடவுதல் நோவின் உணர்வைத் திசைமாற்ற உதவலாம்தான். தடவினேன். கையால் மெதுவாக உடலின் தோல் பகுதிகளை வருடி விடுவது. இது உடலின் கவனத்தை திசைதிருப்பும்.


அண்ணை கொஞ்சம் மேலாலயும் தடவுங்கோ …” கட்டுக்கு மோலாகத் தடவச் சொன்னார். எனக்குப் பயமாக இருந்தது. காயம் எங்கே இருக்கோ. கட்டுப்போட்ட இடத்தில் என்னத்தைத் தடவுவது. தயங்கித் தயங்கித் தடவினேன்.

சிறிது நிமிடத்தில் “இங்க மேலாலை தடவுங்கோ …”இப்போது கட்டுக்கு மேற்பகுதியில் நெஞ்சுப் பகுதியில் தோலில் தடவும் படி சொன்னார். உண்மையில் இந்தப் போராளிக்கு தனது வலி எங்கே என்று குறிப்பாய் உணரமுடியாதிருக்கிறது. எனது கை படும் இடங்கள் கவனத்திசை திருப்புவதால் ஓரிடம் மாறி வேறிடத்தில் வலி தோன்றுவது போல் இருக்கலாம்..

 
தடவுங்கோ…”

இப்ப முந்தி தடவின இடத்தில தடவுங்கோ …அங்க…”

ஒரு கை முறிந்து கட்டுப் போடப் பட்டிருந்தது. மற்றக் கையால் காட்டினார். முறிந்ததா? அதுவும் குண்டு பட்டதா தெரியவில்லை….தடவிக்கொண்டிருந்தேன்.


கொஞ்சம் இறுக்கித் தடவு… ஸ்;…! “


அய்யோ தடவடா இறுக்கித் தடவடா?” வலியால் குளறினார். பரிதாபமாய் இருந்தது

 
எடேய் … தடவடா புண்டமேனே!” பல்லைக்கடிச்சுக்கொண்டு கத்திக்கொண்டிருந்தார். கத்தினார் என்றால் சத்தமல்ல…பல்லைக் கடிச்சுக்கொண்டு வாயுக்குள் கத்திக் கொண்டிருந்தார்…முனகிக்கொண்டிருந்தார்.

நானும் முடிந்தவரை காயக் கட்டுக்கு நடுவேயும், மேலேயும் வேறு இடங்களிலும் மாற்றி மாற்றி என் கைகளால் தடவிக்கொண்டிருந்தேன். எனது இரண்டு கைகளாலும் மாற்றி மாற்றித் தடவி எனக்குக் கைகள் வலிக்கத் தொடங்கிவிட்டிருந்தன. வேலைக்குப் போகும் நேரமும் வந்து கொண்டிருந்தது. இப்போது யாரோ சாப்பாட்டோடு வந்தார்கள். என்னை விடுவிக்கப்போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. தாதியர் ஒருவரும் வந்தார். மருந்தைக் கொடுத்து விட்டுப் போனார். குறைந்தது…உணவின் பின்னாவது இவர் சிறிது வலியற்று உறங்குவார் என்பது தெரிந்தது….


மெதுவாக வெளியேறி எனது சைக்கிளுக்குப் போனேன். மானிப்பாய் வீதியில் இருக்கும் வாசல் பக்கமாய் வெளியே வந்தேன். மாலையாகிறது. இருட்டிக்கொண்டு வருகிறது. மேற்குக் கரைப்பக்கம் வீதியில் வரிசையாக இருக்கும் நாலைந்து கடலைக் காரிகளில் ரெண்டுபெர் மட்டும் இருந்தார்கள். இனி அங்கே இருப்பதும் தேவையற்றது…அவர்களுக்கு ஆபத்தும் கூட. வழக்கமாகக் கடலைக்காரிகள் வைக்கும் சிறிய மண்ணெண்ணை விளக்கை இப்போது இந்நாட்களில் வைத்திருப்பதோ அல்லது அடுப்பை மூட்டி கடலை வறுப்பதோ ஓர் விமானத் தாக்குதலின் எளிதான இலக்காக அவர்களை, அந்தப் பகுதியை ஆக்கிவிடலாம். வெறுமனே கடலை விற்பனையே இவ்வளவு சிக்கலில்… அதைவிட இந்த நாட்களில் குடாநாட்டில் விளக்கெரிக்க மண்ணெண்ணை யாரிடமும் இல்லை. மின்சாரம் எப்போதோ இல்லவே இல்லை. மானிப்பாய் ஆஸ்பத்திரியிலேயே அறுவைச் சிகிச்சைக்கு மட்டும் அவ்வப்போது ஜெனரேட்டரில் மின்சாரம் ஏற்படுத்தி வந்தார்கள். மாலையானால் ஆட்களும் வரப்போதில்லை. கடலை வாங்கிச் சாப்பிடப்போவதும் இல்லை. ஒரு பெரியசரைக் கச்சான் வாங்கிப் பையில் வைத்துக்கொண்டேன். இரவு நித்திரை முழித்திருக்க நல்ல உதவியாயிருக்கும்.


இந்த மருத்துவ மனையில் அய்.நா. பணியாளர் முதற்கொண்டு செஞ்சிலுவைச் சங்கத்தினர் வரைக்கும் அனைவரினதும் போக்குவரத்து இருக்கும். அவ்வளவும் இருந்தும் மானிப்பாய் மருத்துவ மனையையும் அவ்வப்போது, தெரியாத மாதிரி, அறியாத மாதிரி குண்டு வீச்சு இலக்காக மாற்றிக் கொண்டிருந்தன இலங்கைப் படைகள்!

மின்சாரம் அற்றுவிட்டதனால் மின்விளக்குகளால் மருத்துவமனை என்பதை வானில் பறக்கும் இலங்கை ராணுவத்துக்கு அடையாளம் காட்ட முடியாதுள்ளது. அதனால் அவர்கள் அவ்வப்போது ‘தெரியாமல்’, ‘அறியாமல்’ குண்டைப் போட்டு விட்டதாகச் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக மருத்துவ மனையை அடையாளம் காட்ட மருத்துவமனை வளாகத்தின் மூலைகளில் ஏறக்குறைய ஐந்து இடங்களில் இரவிரவாக, டயர் போட்டுக் கொளுத்துவார்கள். இந்த எரியும் டயர்களின் சுவாலைகள் குறைந்துவிடாமல் இருப்பதற்கு அவற்றை இரவிரவாகத் தொடர்ந்து எரிக்கத் தொண்டர்கள் பொறுப்பேற்றிருந்தார்கள். இப்போது இருட்டிக்கொண்டு வருவதால் மூலைகளில் டயர்களைக் கொண்டு வந்து குவிக்கும் வேலைகளில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தார்கள்

இந்த டயர் எரிப்புச் சடங்கு தொடங்குவதற்கு ஏறக்குறைய ஒரு கிழமை இருக்கலாம்… மருத்துவமனையின் கிழக்கும் பக்கத்திலும் தாவடி வீதிப் பக்கத்திலும் இருக்கும் பல பெரு மரங்கள் குண்டு வீச்சில் முறிக்கப்பட்டிருந்திருந்தன. அவை ஏதும் அறியாமல் செய்யப்பட்டதல்ல. அவை மரங்களை நோக்கி வீசப்பட்ட குண்டுகளுமல்ல. ஆனாலும் மருத்துவமனையை அந்த மரங்கள் தங்கள் கிளைகளைக் கொடுத்துக் காப்பாற்றியிருந்தன… பல தமிழர்களின் உயிரையும்.


கைகளை மேலே தூக்கிக்கொண்டு இரண்டு தாதியருடன் வெளியே “நான் மருத்துவர். இவர்கள் தாதியர்” என்று சொல்லி ராணுவத்தின் முன்னே வந்த மருத்துவர் சோமசுந்தரம் கைக்கெட்டிய தூரத்தில் வைத்து யாழ் பெரியாஸ்பத்திரியில் சுடப்படு மூன்று ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்கு முன்னதாக 70 பொது மக்கள் மருத்துவமனை கட்டில்களில் வைத்துச் சுடப்பட்டிருந்தார்கள், கொல்லப்பட்டிருந்தார்கள். இன்னும்கூட மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் மருத்துவமனையும் குண்டுவீச்சு இலக்குத்தான் என்ற பயம் எப்போதும் ஒட்டியே இருந்தது.

முறிந்து போன மரங்களையும் அவற்றின் வயது என்னவாக இருக்கலாம், இவை இன்னும் எவ்வளவு காலம் இருக்கும். என்னையும் எனதுமக்களையும் தாண்டி இந்த மரங்கள் நின்று பிடிக்குமா, அவற்றிற்கு இப்படி வாழ்ந்துஇறந்துபோகும் மக்களின் வரலாற்றை ஏதாவது ஒருவகையில் பல காலம் கழித்துஅவற்றின் கீழ் வந்துவிளையாடப்போகும் சிறுவர்களிற்குச் சொல்லத் திராணியிருக்குமா? என்றெல்லாம் நினைத்தபடி நான் தாவடி ரோட்டில் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தேன். அப்படியே போய் பிள்ளையார் கோயிலடியில் திருப்பி பிறகு காங்கேசந்துறை ரோட்டில் தெற்கே போவேன். அங்கிருந்து ஆடியபாதம் வீதியைப்பிடித்தால் ‘டெம்ப்பிள்’ ரோட் சந்திக்கும் இடத்தில் எனக்குப் பணியிடம் இருந்தது.


சில நாட்களுக்கு முன்பு ஒர் சம்பவம். சிறிது முன்னதாகவே வேலைக்கு வந்திருந்தேன். ஆடியபாதம் வீதியின் ‘டெம்பிள்’ ரோட் சந்திக்கும் இடத்தில் வடபகுதியில் உள்ள தோப்பில் வாழைகளுக்கு நடுவில் கப்பியைக் கம்பத்தில் கட்டி கயிற்றைப் போட்டு எதையோ இழுத்துக்கொண்டிருந்தார்கள். நின்று பார்த்தால் மறு பக்கத்தால் பிக்கப்பில் பெடியள் நின்றிருந்தார்கள். புக்காரா விமானம் போட்ட குண்டு வெடிக்காமல், சற்று முன்பு வாழை மரத்தருகில் ஈரநிலத்தில் புதைந்துவிட்டது. அதை கப்பியில் கட்டி பின்னோக்கி இழுத்துக் கொண்டிருந்தார்கள். எனக்குப் ‘பக்’ என்றது. இது வீரமா? திறமையா? தேவையா? அறியாமையா? நுட்பமா? …அது - குண்டு- எந்த நேரத்திலும் வெடிக்கும் சாத்தியம் ஐம்பது வீதம் உள்ளது. இருந்தும் இதை எடுக்கிறார்கள். அப்படியே விட்டுவிடவும் முடியாது. யாருக்கும் பாதுகாப்பு உடைகளா உள்ளன இங்கே! நிற்காமல் மெல்ல மாறிவிட்டேன்.
இதன்பிறகு எங்கள் பணியிட கட்டிடத்தில் பயம் தொற்றியிருந்தது. இந்த குண்டுவிழுந்த இடத்தில் இருந்து நூறு மீற்றர் எல்லைக்குள் தான் எனது பணிக் கட்டிடம் வடகிழக்காக இருந்தது.

இது நடந்து இரு நாட்களில், சுற்றிச் சுற்றி புக்காரா குண்டு போட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சம் பகல் வேளை. நாங்கள் வெளியில் எழுந்து பார்த்தோம். விமானம் எங்கள் பணிமனையை நோக்கிக் குத்த வருகிற மாதிரி இருந்தது. அது சிலவேளை சில கிலோ மீற்றர்கள் அப்பாலும் இலக்கு வைத்து இருக்கலாம். ஆனால் வானத்தில் இருந்து விமானம் ஏறக்குறைய 45 பாகையில் நிலத்தை நோக்கி வருகையில் அதன் முனையில் இருந்து பார்க்கும் சில கிலோ மீற்றர் வட்டத்திற்குள் உள்ளவர்களுக்கு இலக்கு தாங்கள் என்றே எண்ண வைக்கும். அனைவரும் வாழைத்தோட்டதில் வெட்டி வைத்திருந்த பங்களுக்குள் ஓடினோம்.
எனக்கு போரின் சூடு சுரணை இல்லாததால் ‘கோயில் சுண்டலை இலவசமாக வாங்குவது சரியா?’ என்ற எண்ணியபடி தயங்கித் தயங்கி பின்நிற்கும் விடலைப் பையனைப்போல அனைவருக்கும் பின்னால் மெதுவாக நடந்து போனேன். விநியோக மனேஜர் நாற்பது வயதிருக்கும். எப்போதும் லேசாகச் சுருளான கலைந்து விழும் தனது தலையைக் கோதி மேலே இழுத்துவிட்டபடி இருப்பார்… . அவர் வேகமாக ஓடியவர்களில் ஒருவர். தடுக்கி விழுந்து விட்டார். ஓர் புட்பால் கோல் கீப்பர்போல விழுந்தார். மீண்டும் எழுந்து ஒடும்போது அவர் தனைது தலையைக் கோதியதையும் மறுகையால் பையில் இருக்கும், பேனாக்களைப் பொத்திக்கொண்டதையும் பார்த்தேன்.



இந்நாட்களில் இளங்கன்று பயமறியாது என்பதாகவே எனது நிலை இருந்தது என்பதை பிற்காலத்தில்தான் உணர்ந்து நினைத்தேன். போரே அறியாத எனக்கு விமானக் குண்டின் - அதன் வீச்சின்- மகத்துவம் புரியவில்லை என்பதே உண்மை. ஆனால் எனக்கு இப்படி அடிக்கடி நடந்த பங்கர் ஓட்டங்களால் குளிர்விட்டுப் போனதும் உண்மை. அல்லது நிகழ்தகவில் என்னருகில் குண்டு விழுவதற்கான வாய்ப்பு எத்தனை என்பதைப்பற்றி யோசித்ததாய் இருக்கலாம். அல்லது மரணம் என்பதன் பொருள் என்ன என்பதை ஒருவாறு எனக்குரிய வகையில் புரிந்து கொண்டு வைத்திருந்ததாயும் இருக்கலாம்.

அதன் பிறகு அனைவரும் பங்கருக்கு ஓடும் போது நான் எழுத்து மேசைக்கு கீழே புகுந்து கொள்வேன். பங்கருக்குப் போவதில்லை. கட்டிடத்தில் குண்டு வீழ்ந்து கட்டிடம் உடைந்தாலும் மேசையின் பாதுகாப்பில் கட்டடிட உடைசல்களில் இருந்து தப்பலாம் என எண்ணினேன். அந்தக் காலத்தில் “பங்கர் பஸ்டர்” போன்ற குண்டுகள் இருக்கவில்லை. அதுவும் ஒரு காரணம். பிற்காலத்தில் போரில் போடப்பட்ட குண்டுகள் நான் குறிப்பிடும் வகையானவையல்ல. அல்லது குண்டுகள் போடப்படும் போது அதைத் தாங்கிப்பிடிக்கும் அளவிற்கு - நிலமெல்லாம் அங்கு பின்னொருகாலத்தில் மக்கள் நிறைந்திருந்தார்கள். அது 2009!


லீவு நாட்களில் இரவில் நான் தங்கியிருந்த விடுதியில் - அப்போது விடுதி இயங்கவில்லை- போக்கிடமில்லாத சிலரையும் என்னைப் போன்ற சிலரையும் - செயின்ட் யோசப் பிரதர்ஸ் தங்க அனுமதித்திருந்தார்கள். இது கருணை அடிப்படையிலானது. அதற்கு அருட்சகோதரர். நாயகமும் ஓரு காரணம். அவர் எனக்கு நண்பராயும்கூட, எனது பள்ளி நாட்களில் இருந்தார் என்றே நினைக்கிறன். அங்கேயும் கூட இரவில் மாணவர்கள் படிப்பதற்கென்று அமைந்திருந்த ஹாலில் முன்னால் இருந்த டேபிள் டென்னிஸ் மேசையின் மேலே படுத்துக்கொள்வேன். அந்த நேரத்திலும் விமானச் சத்தங்கள் கேட்கும். ஆனால் அவை பலாலி போர் முனையில். பலாலி ஏழு மைல்கள் தொலைவில் உள்ளது. அதன் சுற்றுப்புறங்களில் சென்றிக்கு நிற்கும் புலிகளின் நிலைகளில் போடப்படும் குண்டுகளுக்கு முன்னரோ பின்னரோ விமானம் அடிக்கும் வட்டமாகவும் அதன் சத்தமாகவும் இருக்கும். அது வந்து திரும்பும் வழித்தடங்களில் நாம் இருந்தோம். ஆனால் அது எங்களை நோக்கியதல்ல. இதெல்லாம் ஒரு ஊகம்தான். மீறிய அனைத்தும் குண்டுவீச்சுக்களும் எதிர்பாராத இடங்களில் நடக்கும். நடந்திருக்கின்றன. விமானத்தில் இருக்கும் சிறிலங்கா ராணுவ விமானியின் மனத்தில் என்ன இருக்கிறதோ அதைப் பொறுத்தது…எனக்கருகில் ஓர் குண்டு விழுவதும் இல்லாததும்.


அன்று மாலையில் நாளிதளில் செய்திக்கு ஓர் விமானம் வீழ்த்தப்பட்டது தலைப்பானது. புலிகளிடம் விமானத் தாக்குதல் கருவிகள் வந்துவிட்டனவா? என்றெல்லாம் ஆய்வுக் கட்டுரை எழுதினார்கள். எனக்குச் சிறு செய்திகள் எழுதுவதற்கு மட்டுமே வாய்ப்பு. இதெல்லாம் ஆய்வு செய்து களச்செய்தி தருவதற்கு சில சமயம் ஆட்களை அனுப்பினலும்… அவர்கள் செய்தி சேகரிக்க முடியாது திரும்பி வரவேண்டியிருக்கும். போரின் நிலைகளுக்கு யாரும் சென்றுவிடமுடியுமா? செய்திகள் செவி வழியாகத்தான் இருக்கும். உறுதிப்படுத்தப்பட்டவையாய் இருக்காது.

இந்த விமான வீழ்ச்சியில் பின்னணியில் யார் இருந்தார்? விவரம் என்ன? என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கவில்லை. அப்போ ‘ஹீரோ ராஜ்’ என்ற பெயர் அடிபட்டது. அந்தப் போராளி தரையில் படுத்திருந்தவாறே நெடுநேரமாக தனது சென்றியில் தவமிருந்தாராம். அது அராலிக்குக் கிட்ட உள்ள சென்றியில் என்றும் சொன்னார்கள். கோட்டையில் தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகளுக்கு குண்டு வீச வரும் இராணுவ விமானங்கள் குண்டுக்கான இலக்குகளை நோக்கி உயரத்திலிருந்து குறிவைத்து கீழ் நோக்கி இறங்கி குண்டைப் போட்டுவிட்டுச் செல்லவேண்டும். இந்த இலக்குகளை நோக்கி வரும்போது புலிகளின் “பெரும் எந்திரத்” துப்பாக்கிகளின் சுடு எல்லைக்குள் வரக்கூடாது. வந்துவிட்டால் புலிகளின் “பெரும்; எந்திரத்” துப்பாக்கித் தாக்குதல் ராணுவ விமானங்களை எட்டிவிடும். பிறகு கதை கந்தல்தான். அதனால் விமானங்களை கடல் பகுதிக்குள்ளாகவோ புலிகளின் தாக்குதலுக்குச் சாத்தியமற்ற நிலப் பகுதிகளை ஒட்டியோ சென்று தாழப்பறந்துவந்து புலிகளின் நிலைகளைக் குறிவைப்பார்கள். இப்படி வானத்தில் பயந்து மறைந்தோடும் இராணுவத்துக்குக்கூட அவர்கள் எதிர்பார்க்காத மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் பிக்கப் வண்டிகளில் சென்று மரங்களிடையே மறைந்திருக்கும் புலிகள், பெரிய எந்திரத் துப்பாக்கிகள் மூலம் அந்த விமானங்களைச் சுட முயற்சித்துக் இலங்கை ராணுவத்திற்குக் கிலி கொடுத்திருக்கிறார்கள்.

அதல்லாம் வேறு கதை. ஹீரோ ராஜின் கதையோ வேறு. இந்தப் போராளி இருந்த சென்றி கோட்டையை அண்மிய மேற்குக் கடற்கரையோரம் உள்ள ஓர் சென்றி. தாழப்பறக்கும் விமானங்கள், கோட்டைக்கு அருகில் சுற்றி நின்று தாக்குதல் நடத்தும் போராளிகளின் நிலைகளையே எப்போதும் இலக்கு வைத்துத் தாக்கி வந்தன. ஆனால் அவை கடல் நீரேரிப் பகுதிக்குள்ளால் வந்து சென்றன. நீர் வற்றக் காத்திருக்கும் கொக்குபோல எப்போதும் தரையில் படுத்தபடி இப்படிப்பட்ட விமானத் தாக்குதல் நேரங்களில் பெரிய எந்திரத் துப்பாக்கியுடன் தவமிருப்பாராம். அந்நாட்களில் இருந்த பல போராளிகள் அறிவியல் முதலிய விடயங்களில் கூர்மையாய் உள்ளவர்கள். பலர் பல்கலைக்கழகப் படிப்புக்களைப் பாதியில் துறந்து புலிகளுடன் இணைந்திருந்தவர்கள். இவரும் அப்படியாய் இருந்திருக்கலாம். விமானங்கள் தங்களைத் தாக்குவதற்கு நெருங்கி வருவது போலிருந்தாலும் இவர் மற்றவர்களைப்போல் பங்கருக்குள் ஓடி ஒளிவதில்லையாம். “என்றாவது ஒரு நாள் எனக்கு கிட்டவாக அவன் பறப்பான். அவனை நான் சுடுவேன்!” என்று முணுமுணுப்பாராம். 



அப்படியான ஒரு நாளில் தான் வீரிட்டுக்கொண்டு வந்தது. விமானம் தரையை நோக்கி இலக்கு வைத்து இறங்கி வருகையில் விமானத்தின் சத்தம் வழக்கமான விமானம் பறக்கும் சத்தமாயிருக்காது…. விமானம் குண்டு போடுவதற்கு இலக்கை நோக்கித் திரும்பி குறிவைத்து வரும்போது தொடர்ந்து பறக்கும் விமானச் சத்தம் அங்கே இருக்காது. சத்தம் தலைக்குமேல் கேட்கும் போது சரியாகத் தலைக்கு மேலாகப் பறந்து கடந்திருக்கும். மேலால் விமானம் வரும் முன்னர்…சத்தத்தின் திசையைக் குறித்து அதன் பாதைக்குக் குறிவைத்து சுட்டிருக்கிறார். ஒளிப்பிம்பமான விமானம் ஒலியாக வந்து மாறி… விமானம் கண்ணுக்குப் தென்படுகையில் ஹீரொ ராஜ் சுட்ட குண்டுகள் கடந்து கொண்டிருக்கும் விமானத்தினைத் தொட்டிருக்கிறது!

அதுதான் முதல் முதலில் இலங்கைப் போரில் விமானம் தமிழர் தரப்பினால் வீழ்த்தப்பட்டதன் கதை!

இந்தச் செய்தியைப் புழுகிக்கொண்டே தமிழ் இதழ்கள் வெளியிட்டன. குடாநாட்டில் அன்று காலை அனைவரும் செய்தியை உரையாடிக்கொண்டிருந்தார்கள். அந்த நாட்களில் காகிதத் தட்டுப்பாடு. நாலு பக்கத்தில்தான் செய்திதாள் வரமுடியும். காகிதம் கிடைக்காமல் பாடசாலை மாணவர்களுக்கு வரியிட்டு விற்பனை செய்யப்படும் காகிதங்கள் வாங்கி அவற்றிலும் செய்தி அச்சிட்டுக் கொடுக்கப்பட்டன. உள்நாட்டுச் செய்தியை வேறு வகையில் அறிய முடியாதிருந்தது. உலக வானொலி நிலையங்கள் போர் முனையில் குடாநாட்டிலும் கிழக்கிலும் இருந்து வழங்கினதான். ஆனால் அதைக் கேட்பதற்கு, வானொலியை இயக்குவதற்கு குடாநாட்டில் பற்றரிக்கு, மின்சாரத்திற்குத் தட்டுப்பாடு என்பது அந்த ஏபிசி-பிபிசி-ஐபிசி- ஓபிசி முதலிய உலக வனொலிகளுக்கு தெரியாதிருந்தது இன்று வரை ஆச்சரியம்.


அப்போதெல்லாம் வானொலிகளை சைக்கிள் டைனமோவை வைத்துத்தான் இயக்கி செய்திகளைக் கேட்பது வழக்கம். ஸ்டான்ட் போட்டு நிறுத்திய சைக்கிளை ஓரு சிறுவன் ஏறி நின்று மிதிக்க, அதில் இணைக்கப்பட்ட வானொலி ஒன்றை அனைவரும் கேட்கும் காட்சிகள் மிகப் பொதுவானவை. அந்த செய்திகள் சைக்கிள் மிதிக்கும் பையனின் தீவிரத்திற்கு ஏற்ப ஒலி கூடிக் குறiயும். அந்த மாதிரி செய்தி தட்டுப்பாட்டு நேரத்தில் ‘ஹீரோ ராஜ்’ மாதிரி ஆட்களின் செய்தி யாரை எட்டும். ஆனால் மறு நாளே, “தொடர்ந்தும் ‘ஹீரோ ராஜ்’ பற்றியும் அந்த விமான வீழ்ச்சி பற்றியும் எழுதவேண்டாம்” என்று பத்திரிக்கை நிறுவனத்துக்குக் குறிச்செய்தி வந்ததது. அதைத் தணிக்கையும் என்று சொல்லலாம்! அரசு இல்லாவிடினும் தணிக்கை உண்டு. அதன் காரணகர்த்தா யார் என்பது அறியப்படமுடியாதது. பல இடைநிலைப்பூசாரிகள் தலைமைப் பதவியில் இருப்பவர்களிடம் மற்றவர் பெயர்பெற்றுவிடாமல் இருக்கும் தகிடுதித்தங்களாகவும் இவை இருக்கலாம்.


இதில் வேடிக்கை என்னவென்றால் 20 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் திருச்சி வானொலிக்கு மறுகரையில் மன்னாரில் என்ன நடக்கிறது என்பது தெரியாதிருக்கும். பல்லாயிரம் மைல்கள் தாண்டி இருக்கும் பிலிப்பைன்ஸ் - வெரித்தாஸ் வானொலியின் ‘உங்கள் சபா’ மிகுந்த வாஞ்சையோடு அழகிய தமிழில் நமது அடுத்த ஊரில் நடத்த செய்திகளைத் தருவார். தமிழர்களை இந்த காலனித்துவச் சிக்கலிலும் போரிலும் மாட்டிவிட்ட பிரித்தானியாவின் தமிழ்ச் சேவை - பி.பி.சியின் சங்கர் அண்ணாவோ நோகாமல் நொங்கெடுக்கும் செய்திகளைத் தந்து தங்களது நேயர்களைத் தக்கவைப்பார். அலையலையாக ஏறி இறங்கி வரும் ஒலி வேறுபாடுக்கிடையில் வெரித்தாஸ் உண்மைச் செய்தி தந்தது என்றே மக்கள் நம்பினர். அதே நேரம் இலங்கை வானொலியும் இருந்தது. அது எப்போதும் தமிழ்நாட்டின் சினிமாப் பாடல்களை அழகியமுறையில் ஒலிபரப்பச் செய்து உயிர் வாழ்ந்துகொண்டிருந்தது.


கோட்டையைச் சுற்றியிருக்கும் புலிகளின் நிலைகளைக் குறிவைத்து குண்டுபோடும் ராணுவ விமானங்களின் வீச்செல்லைகள் பல வேளைகளில் அனைவரிடமும் கேள்விகளை எழுப்பின! அது மிகவும் சிக்கலான காலம் என்பதைச் சொல்லத்தேவையில்லை. பகலில் தான் நடமாடலாம். இரவில் புலிகள் நிலைக்கருகில் குண்டு வீசும் விமானங்கள் பறந்தபடியிருக்கும். பகலிலோ அனைத்து இடங்களிலும் அவை குண்டுகளை வீசி வந்தன. இரவிலோ நடமாட முடியாது. மருந்துகள் கிடையாது. மின்சாரம் கிடையாது. என்ன நடக்கிறது என்பது ஊகக் கதைகளாகவே தெரிந்து வந்தன.

கோட்டை அடிபாடு நடந்து கொண்டிருக்கும் நாளில் இடையில் ஓர் நாள் அக்டோபர் மாதத்தில் புலிகளின் தரப்பிலிருந்து முசுலிம் மக்களை வெளியே போகச் சொல்லி திடீர் அறிவிப்பொன்று வந்தது. பொதுவான மக்கள் அனைவரையும் இந்தச் செய்தி எட்டி அதற்கான விளக்கம் கிடைக்கும் முன்னரே இந்த வெளியேற்றத்தின் பாதி நடந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். முதலில் சாவகச்சேரி பகுதியில் தான் அனைத்து முசுலிம் மக்களையும் வெளிறேச் சொன்னார்கள். அதற்குக் காரணமும் அவரவர் பாட்டுக்கு கற்பித்துக் கொண்டார்கள். கட்டுப்பெட்டிக்குள் வயர்லசோடு பிடித்தார்கள் என்பது அதில் ஒரு கதை. என்னைப்பிடித்து என் சாப்பாட்டுபெட்டியைத் திறந்து பார்த்ததை நினைத்துக்கொண்டேன்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதா அல்லது மாறி நினைப்பதா என்பதும் தெரியவில்லை. ‘பாவம்! கையில் 50 ரூபாய்க்கு மேல கொண்டு போகக்கூடாது என்று சொல்லிவிட்டார்களாம்’ என்பதும் ஒரு கதை. ஆனால் எனக்குத் தெரிய இருபது ஆயிரம் ரூபாய் கொண்டு போகலாம் என்று அனுமதிக்கப்பட்டிருந்தது என்றும் ஆளுக்கு ஐந்து கைப்பைகள் கொண்டு போகலாம் என்றும் அனுமதிக்கப்பட்டிருந்தது. என்னத்தைக் கொண்டு போனாலும் என் வாழிடத்தைவிட்டு என்னை வெளியே போகச் சொல்லுவது தவறல்லவா?
அதைச் செய்வித்தது கருணா என்றார்கள். கரிகாலன் என்றார்கள். ரமேஸ் என்றார்கள். ஆனால் இன்று யாரும் இல்லை. புலிகளுடன் இல்லை. கருணாவோ அங்கே தான். அவருடன் கூட இருக்கும் யாராவது ஓர் தெளிவைப் பெற்றுத்தரலாம். ஆனால்…காலங்கடந்த இந்த எல்லாம் என்ன பயனும் தராதவை.

எனக்கு இந்த வெளியேற்றம், மத்திய கிழக்கில் இருந்து வந்ததனால் அதிகமாக மனதை உறுத்தியது. ஏன் சொன்னார்கள்? அப்படிச் சொல்லலாமா? எத்தனை ஆண்டுகள் வாழ்ந்த மக்கள்? என்னை நினைத்துக் கொண்டேன்! எவ்வளவு ஆசையாக மத்திய கிழக்கிலிருந்து திரும்பி வந்தேன்.

நான் வீட்டில் தரையிறங்கி எனது வீட்டின் வாசனையை முமையாக உணரமுன்பு, திருமணமாகாமல் தப்பிப் பிழைத்து எஞ்சியிருக்கும் எனது தங்கைகளுக்கு, முன்புபோல கோதுமை ரொட்டியை வீட்டின் அடுக்களையில் சுட்டுக்கொடுக்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும் முன்பு…எனது தாயை ரெண்டு மூன்று தரமாவது நெருங்கி இருந்து செல்லமாகக் கொஞ்சி உரையாடுமுன்பு, எனது தந்தையின் தோளில் உரச முன்பு, அவருடன் மீண்டும் ஒரு முறை முரண்பட முன்பு… எனது பால்யக் காதலை மீண்டும் ஒருமுறை சுவாசிக்கம் முன்பு...எனது ஊரும் சுற்றமும் அந்தப்பிராந்தியமும் வலிகாமம் வடக்குப் பகுதியும் மொத்தமுமே இடம்பெயர்ந்து விட்டது. அது என் நிலம் என்பதற்கு இன்று வரை எந்த உரிமையும் கருணையும் இலங்கையின் உலகின் அரசுகளால் காட்டப்படவில்லை. இந்த ஓட்டம் மனிதருக்குத் தேவையா? இந்தத் துரத்தல்கள் மனிதருக்குத் தேவையா!? இவை எவற்றைப் பெற்றுத்தந்தன?

காலையில் வீட்டிற்குப் போவதற்குப் பிந்தினால்…. மானிப்பாய் ஆஸ்பத்திரியில் கடைலைக்காரிகள் இருக்கும் இடத்தைத் தாண்டிப் போகும் போது எனக்குப் பிடித்த யாராவது இருந்தால் அவர்களிடம் கடலை வாங்கிக் கொறித்தபடி சைக்கிளை மிதிப்பேன். கடலை என்பது சினிமா பார்ப்பதோடு தொடர்புடையது. சினிமாவுக்கு அடிமையா, கடலைக்கு அடிமையா என்பது சில நேரம் கேள்வியாகிவிடும். காங்கேசன்துறையில் இருக்கும் இரண்டு திரையரங்குகளும் யாழ் பகுதிகளிலும் அறியப்பட்டது. தொடர்ந்தும் ஆங்கிலத் திரைப்படங்களும் தென்இந்தியத் திரைப்படங்களும் ஓடிக்கொண்டேயிருக்கும். காங்கேசன்துறை வட்டகை மக்கள் பார்த்துத் தள்ளிய திரைப்படங்களை ஒப்பீட்டளவில் இந்தக் காலத்தில்கூட யாரும் பார்த்திருக்க முடியாது. அவ்வளவு திரைப்படங்கள். திரைப்படங்கள் அளவிற்கு அந்தத் திரையரங்கு வாசல்களில் விற்கும் கடலைகள் சுவையானவை. அல்லது கச்சான் என்பார்கள். யாழ் தியேட்டரும் ராஜநாயகி தியேட்டரும் அவற்றின் கடலைகளும் கச்சான்களும் வாழ்வின்பகுதி.


அந்தச் சோட்டையில் நான் மானிப்பாய் மருத்துவமனையின் வாயிலில் மேற்குப் பக்கத்தில் இருக்கும் கச்சான்- கடலைக்காரிகளிடம் மயங்கியிருந்தேன். ஒரு வேளை திரைப்படம் என்ற கலைவடிவத்தின் மறுபிரதியீடாக நான் அவர்கள் விற்ற கடலையை வாங்கிக் கொறித்தேனோ என்று இன்று எண்ணலாம். ஆனால் கடலையைக் கண்டவரிடமும் வாங்கிவிடமாட்டோம். அந்தக் கடலைக்காரிகள் - கச்சான்காரிகளிடம் குறிப்பிட்டவர்களிடம் மட்டும் நமது சிறிய வயதில் ஓர் ஈர்ப்பு இருக்கும். சில ஆட்களைப்பார்த்தால் அவர்களிடம் கடலை வாங்கித் தின்ன மனம் வராது. குறிப்பிட்ட ஆட்களிடம்தான் வாங்குவோம்.

அன்றும் அப்படித்தான். போன வழியில் கடலையை வாங்கிக் கொறித்துக்கொண்டு சைக்கிளை உருட்டிக்கொண்டு போனேன். இருட்டிவிட்டால் நகரின் வெளியே இருப்பவர்களுக்கு விமானக் குண்டுத் தாக்குதல் பயமில்லை. பகலில் இப்படிச் சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்து போவதே ஆபத்துத்தான்.


ராணுவம் வீசி வந்த குண்டுகளின் - அவற்றின் வீச்சுகளின் - எல்லைகளைப் பிற நாடுகள் ஒரு போதும் நெருக்கடி கொடுத்து நிறுத்தியதே இல்லை. கோட்டையைச் சுற்றியுள்ள புலிகளின் நிலைகளைத் தாக்குகிறோம் என்று ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்த யாழ் மருத்துவமனை தாக்கப்பட்ட அதே வேளையில், கோட்டையின் மேற்குப் புறத்தில் குறிப்பிட்ட சில குறிச்சிகள் எந்த குண்டுத் தாக்குதலிலும் சிக்காமல் தப்பி நிலத்தில் இருக்கும் தனித்தீவாகத் தப்பித்து இருந்து வந்தன. அந்தக் குறிச்சிகளைத்தாண்டி அவற்றிற்கு அப்பாலும் குண்டுகள் வீழ்ந்தன. அதற்கு முன்பாகவும் வீழ்ந்தன. அதன் வடக்கேயும் வீழ்ந்தன. தெற்கேயும் வீழ்ந்தன. ஆனால் அந்தக் குறிச்சிகள் மட்டும் தாக்கப்படவேயில்லை. அல்லது குண்டுகளின் கண்களில் சிக்கவேயில்லை.

ரெண்டு நாள் லீவின்பின்னர் வேலைக்கு வரும்போது கோட்டையில் அடிபாடு மும்முரம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அன்று விடியும் வேளை வேலை முடிந்து புறப்பட்டிருந்தேன். மறுநாள் இளவாலையில் உறங்கி எழுந்திருக்கையில் காலையில் கோட்டையில் சிக்கியிருந்த 300க்குக் கிட்டவான ராணுவம் காணமல் போய்விட்டது. பேச்சுவார்த்தையில் பின்கதவால் ஓடிவிட அனுமதி கொடுக்கப்பட்டது. கோட்டைக்குக் கடலுடன் கலக்கும் ஓர் பின் கதவு வழி ஒன்று இருந்ததுதான். பிற நாட்டு அரசுகள் புலிகளுக்கு கொடுத்த நெருக்கடியும் காரணம் என்றும் சொல்லப்பட்டது. ஹெலியில் வந்து பலரைக் கொண்டு போனார்கள் எனப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. புலிகளின் மோட்டார் தாக்குதல்கள் கோட்டைக்குள் உலங்கு வானூர்திகள் இறங்க இடம் தரவில்லை. இப்படிக் கதைகளும் அவ்வப்போது வருவதுதான். ஏதாவது முகாம்கள், ராணுவ நிலைகள் சுற்றிவளைக்கப்பட்டால் பின்னர் அவர்கள் ஓர் சிறிய பாதைக்குள்ளால் வெளியே போக விடப்படுவதும் அவர்களைப் பிற நாட்டின் நெருக்கடியில் விடவேண்டியதாகிவிட்டது என்பதும் தொடர்கதை மாதிரி ஈழப்போரில் நடந்திருக்கிறது. நூற்றுக்குக் கிட்டவான நாட்கள் நடத்தப்பட்ட இந்த முற்றுகையில் உள்ளிருக்கும் ராணுவத்துக்கும் மன உறுதி குலைந்தது. அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு செஞ்சிலுவைச் சங்கம் தலையிட்டு புலிகளின் தாக்குதல் இன்றி ராணுவ விமானங்கள் உணவுப்பொதிகளைப் போட்டுச் சென்றன. அறமுறை வழிப்பட்ட முற்றுகையும் அரசியல் வழிப்பட்ட தப்பியோடலுமாய் அந்தக் கோட்டை முற்றுகையும் வழக்கம்போல பிற பல ஈழப்போர் அத்தியாயங்கள் போல முடிவடைந்திருந்தது.

ஆச்சரியங்களும் தணிக்கையுமான இப்படியான ஒரு நாளில்தான் திடீரென்று கோட்டையை விட்டு ராணுவமும் ஓடிப் போய் விட்டது. மக்கள் திரண்டார்கள். மறுநாள், தொடர்ந்த நாட்கள் எல்லாம் கோட்டையைப் பார்க்க, கோட்டையை உடைக்க என்று குடாநாட்டின் மக்கள் இளையோர், சிறார்கள் முதியோர் எனப் பாரபட்சமில்லாமல் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். கோட்டை நாலு பக்கத்தாலும் சுவர்களை உடைத்து ஏறக்குறைய நான்கு வழி வந்தமாதிரி இருந்தது. தொடர்ந்து உடைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தக் கோட்டை ஒரு மதில் சுவர் அல்ல. கொத்தளம் அதன் பிறகு அகழி அதன்பிறகு கோட்டை மதில் சுவர் மூன்று முதல் ஐந்து பாகம் அகலமுடையது. ஆக கோட்டையை உடைக்கிறேன் என்பது மக்கள் வந்து அதைத் தொட்டுச் சென்றதுதானே ஒழிய கோட்டை ஐந்து வீதம் கூட சிதைக்கப்படாமல் இருந்தது.

இப்போது குடாநாடு முழுவதும் வன்னி வரைக்கும் ஆனையிறவு முகாம் தவிர்த்து புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால். இனிச் சின்னச் சின்ன முகாம்கள்தான் ஆங்காங்கே அவற்றையும அடித்தால் எல்லாம் சரி என்றார்கள். எனக்கு தொடர்ந்தும் என்ன நடக்கின்றது என்பதே முழுதாகப் புரியவில்லை என்பதாக இருந்தது. தொடர்ந்து போய்க்கொண்டிருநு;த நாட்கள் கிழமைகளாக எனது தாயார் பழைய கரடி கதையாக என்னை ஏதாவது வேறு நாட்டிற்குப் போகச் சொல்லி நச்சரிக்கத் தொடங்கியிருந்தார். அல்லது திருமணம் செய் என்றார். இடையே அவரின் அங்கலாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வழக்கமான தொண்டுப்பணி, உதவி செய்ய என்று புலிகளின் வண்டியில் ஏறி-ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டேன்

அது அவர்களுக்கான களமுனையில் பங்கர் வெட்டும் வேலை. ஒரு இரவு முழவதும் வைத்திருந்து கொண்டுவந்து விட்டார்கள். எங்கோ ஓரிடத்தில் சல்லி நிறைய இருக்கிறது அள்ளி வாருங்கள் என்றார்கள். ட்ராக்டர் வண்டியை ஒருவர் ஓட்டி வர, பலர் போனோம். சல்லிக் கற்கள் அள்ளி ஏற்றியாயிற்று. திரும்பியும் கொண்டு போய் சேர்ப்பதற்கு போய்க்கொண்டிருந்தோம். எங்களுடன் வந்திருந்த புலிகளின் உறுப்பினர் “கீழ படுங்கடா கீழ படுங்கடா” என்றார்…..ட்ராக்டரில் பெட்டியில் நின்று கொண்டிருநதவர்கள் விழுந்;து படுத்தார்கள். நான் நிற்பதற்குப் பயத்தில் முதலிலேயே உட்கார்ந்து வந்து கொண்டிருந்தேன். எங்கள் ட்ரக்டருக்கு மேலாக நெருப்பு நிறத்தில் வாழைப் பொத்திகள் பறந்தன.

என்ன பாக்கிறீங்கள். நாங்கள் இப்ப கீரிமலையில் இருந்து மாவிட்டபுரம் போறம். ஃபக்டரியில் இருக்கிற ஆமி சும்மா விடுவானே” என்று சிரித்தார் அவர். அதுல பறந்து கலிபர்! அடப் பாவிகளா? கலிபர் குண்டுகள் ஹெலியில் இருந்து அடித்தால் கோடரி கொண்டு வெட்டிப் பிளந்தமாதிரி பள்ளத்தை ஒரு குண்டின் தாக்கம் ஏற்படுத்தும். அது மனிதரில் பாய்ந்தால்…காங்கேசன்துறை சீமேந்து ஃபக்கடரியின் முகாமில் இருந்த இராணுவம் கலிபர் குண்டுகள் பொருத்திய எந்திரத் துப்பாக்கியால் எங்களைக் குறிவைத்திருக்கிறது. விழுந்து படுத்ததால் தப்பித்தோம். சற்றுத் தவறியிருந்தாலும் யாரையாவது நடு உடலில் துழைத்திருக்கும். இதைவேறு வீட்டில் வந்து வீரக் கதையாகப் பேசியிருந்தேன். இதெல்லாம் சேர்ந்து எனது தாயாரை நெருக்கடிக்குள்ளாக்கியது.

அதனால் என்னை ஓடு ஓடு! எங்காவது ஓடு என்று துரத்தினார். எழுந்த பாட்டுக்கு நாட்டைவிட்டுப் போகமுடியாது - அதாவது குடாநாட்டைவிட்டு. அதற்கு இப்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புலிகளின் அனுமதியை வெளியேறுவதற்குப் பெறவேண்டும். அதற்கு முதலில் உள்ளுரில் இருக்கும் சிற்றூரவை என்னும் அமைப்பின் தலைவரிடம் இருந்து கடிதம் பெறவேண்டும். பின்னர் புலிகளின் பணிமனையில் அனுமதி பெறவேண்டும். அவர்களுடைய பணிமனைக்கு அலையாய் அலைந்து ஒருவாறு அனுமதி பெற்றாயிற்று.

ஒரு பிற்பகலில் தங்கைமார்களின், அம்மாவின் அழுகுரல்கள் விசும்பல்களுக்கிடையில் வாடகைக்கு ஒழுங்கு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்தேன். அவர்களுக்கு வாழ்வின் உண்மை தெரிந்திருந்திருக்கலாம். தொலைவு என்பதும் தொலைந்து போவது என்பதும் ஒன்று என்பதாக….அவர்களில் இருந்து தொலைந்து போன, புதிய வாழிடத்தை நோக்கி திசைதெரியாத பயணம் நோக்கி புறப்பட்டேன். வாடகைக்கு ஒழுங்கு செய்யப்பட்ட வண்டிக்காரர் என்னை ஓமந்தை புலிகளின் சென்றி வரைக்கும் கொண்டு வந்து விடுவார். அதன்பிறகு மறு பக்கத்தின் ராணுவச் சாவடி தாண்டி ரயில் ஏற கொழும்பு வரவேண்டும். அங்கு எனது நண்பர் என்னைத்தாங்க நிற்பார் என்பது ஏற்பாடு.


வண்டி போய்க்கொண்டிருந்தது. வண்டிக்காரரும் ஏனோ நான் வேலைக்குச் செல்லும் பாதையாலேயே போய்க்கொண்டிருந்தார். சண்டிலிப்பாய் ரோட்டில் விளா வெளியில் இருந்து வந்து ஏறி மானிப்பாய் ஆஸ்பத்திரி வருகிறோம். எனக்கு ஒரு சரைக் கச்சான் வாங்கினால் என்ன என்ற எண்ணம். அப்படியே நிமிர்ந்து பார்க்கிறேன். கடலைக்காரிகள் இருந்து கடலை விற்ற வீதியின் கரை குண்டு வீச்சில் கரைந்திருக்கிறது. 



கொஞ்சம் சிலோ பண்ணுங்கோ அண்ணை”


தெரியாதோ தம்பி…உவங்கள் கோட்டை அடிச்சிட்டாங்கள் எண்ட ஆத்திரத்தில் இங்க யாழ் ரவுணைச்; சுத்தி சுத்தி நேற்று அவங்கள் பொழிஞ்சவங்கள். ஆஸ்பத்திரி, சனம் எண்டும் பாக்கேல்லை. பிறகு ரெட் கிறாஸ் காரர் வயரலசில கத்தியெல்லோ ஆஸ்பத்திரி தப்பினதாம். இந்தப்பக்க கடைமுழுக்க காலி..” மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் சொல்லிக்கொண்டே போனார்.


கடலைக்காரிகள் இருந்த பகுதிகளைக் கையால் காட்டுகிறார். எனக்குக் கடலை என்பது எனது தந்தையின் நினைவு! எனக்கு கடலை என்பது எனது தந்தையினுடைய தாயின் நினைவு! அவரும் கடலை விற்பவர். அவர்தான் என்னை முதலில் சினிமா பார்க்க அனுப்பி வைத்தவர். தன்னந்தனியாகச் சென்று - அவர் தங்கியிருந்த வீட்டுக்காரப் பையன்களுடன்- பத்து வயதிருக்கலாம்… திரைப்படம் பார்த்தேன்.

யூ லைக் கோயிங் பிச்சர்” என்று ஆங்கிலத்தில் சொன்னது எனக்கு அப்போது புரிந்திருக்கவேயில்லை. அவர்தான் எனக்கு வாசிக்கக் கற்றுக்கொடுத்தவர். கடந்த அமைதிப்படை வரவில் எங்கோ ஒரு கோயிலில் குண்டுவீச்சுக்கு சமாதியானவர். எங்கிருந்தார் - அல்லது எங்கே சமாதியானார் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு ஒவ்வொரு கடலை விற்போரும் எனக்கு முக்கியம். இங்கு மீண்டும் கடலைக்காரிகளைக் கொன்றிருக்கிறார்கள். இந்தப்போரில் எத்தினை கடலைக்காரிகள் கொல்லப்பட்டிருப்பார்கள். எனக்குக் கதைசொன்ன எத்தினை அய்யாம்மாக்கள் குண்டுவீசப்பட்டுக் காணமல் போயிருப்பார்கள்? என் சந்ததிக்கு வாசிப்புக் கற்றுக் கொடுத்தது கடலைக்காரிகள்தான் என்பேன். ஒருதடவை வாங்கிவிடும் கடலைச் சுருளில் இருக்கும் ‘கலைமகள்’ பக்கமோ அல்லது ‘பேசும் படத்தின்’ பக்கமோ ‘அம்புலிமாமாவின்’ பக்கமோ மற்றொரு கடலைச் சுருளை வாங்கச் சொல்லித் தூண்டும். அதில் தரப்பட்ட வாசிப்பின் தொடுப்புக்களைத் தேடச்சொல்லி இடைவெளி வைக்கும். கடைலைச் சுருள்கள்தான் நம் வாசிப்பின் முதல் கொக்கிகள்.

எனது நினைவுகளை மீறி வண்டி போய்க்கொண்டிருக்கிறது. அவர் ஏனோ கண்டி றோட்டுக்குப் போகமல் பாசையூர் வழியாகப் போக கடற்கரை வீதியால் வண்டியை விட்டுக் கொண்டிருக்கிறார். யாழ் கோட்டையைத் தாண்டிக்கொண்டிருக்கிறோம். கோட்டையில் கொடி பறக்கிறது. வழமைக்குமாறான பல இடங்களில் உடைக்கப்பட்டதனால் ஏற்பட்ட சில இடைவெளிகள் தெரிகின்றன. இன்னும் அதே அகழியும் அதே கொத்தளமும் ராட்சதமாய் யாழ் முத்தவெளியின் நடுவே நிற்கின்றன. அய்ரோப்பிய வெள்ளைக்காரர்கள் சுரண்டலின் வரியிறுப்பு மையமாகவும் அரசாதிக்க அடையாளமாகவும் சிறிலங்கா இனவாதிக்க குறியீடாகவும் இருந்த இந்தக் கோட்டை அறுநூறு ஆண்டுகள் பின்னர் தமிழர் கைகளில் கிடக்கிறது. அதன் அருகே நூற்றாண்டுகாலத் தமிழ் நூல்களோடு, தமிழர் வரலாற்றோடு சிங்கள இராணுவத்தால் எரிக்கப்பட்டுச் சாம்பலான யாழ் நூலகம். அது பாழடைந்து எருக்கலைகள் சாரளத்தின் வழி எட்டிப்பார்க்க நிற்கிறது. வடகரையில் பல்வேறு உன்னத நாடக ஆற்றுகைகளைக் கண்ட வீரசிங்கம் மண்டபம் துப்பாக்கிச் சிதிலத்தில் கிடக்கிறது. பார்த்துப் பார்த்து மகிழ்ந்த ஆங்கிலப் படங்களின் திரையங்கான ரீகல் பாழடைந்த கட்டிடமாக எப்போதோ ஆகிவிட்டிருக்கிறது. தூரத் தூரப்போகும் வண்டியில் இருந்து திரும்பிப் பார்க்கிறேன். டச்சுக் கோட்டையின் நடுவில் துரத்திலிருந்து கண்ணில்படக்கூடிய துக்குமரக் கூண்டு மட்டும் தெரிகிறது. யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியன் தூக்கிலிடப்பட்டது எங்கே?