I am a part of the Universe, try to find is there a parallel. பெருவெளியின் பகுதியாய் ...

செவ்வாய், அக்டோபர் 27, 2015

வேலுண்டு வினையில்லை… கொடியுண்டு …. பயனில்லை!

வேலுண்டு வினையில்லை… கொடியுண்டு …. பயனில்லை!

- மாமூலன்

சுவிசில் நடந்த தமிழர் தரப்பின் ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்தியில் பார்த்தேன். அதைப்பற்றி முகப்புத்தகத்தில் பின்வருமாறு(21 செப் 2015)ஒரு நிலைச் செய்தி இட்டிருந்தேன்.

“2002 முதல் 2011 வரையான காலத்தில் நடந்த வன்முறைகளுக்கான குற்றப்பத்திரிக்கை (மனித உரிமை அறிக்கை!) 2009 வரைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளும் பாரிய சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், ஆட்கடத்தல், சிறார் படைச்சேர்ப்பு, சொத்துக்கள் கையகப்படுத்தல் என்று குற்றம் சாட்டப்பபட்டுள்ளனர்.

இப்போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளைத் தூக்கிக்கொண்டு ஒட்டுமொத்தத் தமிழர்களில் குரலாக வலம்வவருவதற்கு யாரும் உரியமையற்றவர்கள்.
சரியாகச் சிந்திக்கவேண்டும்.” (2.) எனது நண்பர் ஒருவர் அதற்குப் பதிலாக ‘?’ அடையாளத்தை இட்டிருந்தார். அது பல கேள்விகளை எழுப்பியது எனலாம்.

நான் தமிழீழ விடுதலைப் புலிகளை மிகவும் மதிக்கிறேன். இது ஒன்றும் ரகசியமும் அல்ல. என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரிந்ததுதான். இது அவர்களின் முன்னாள் உறுப்பினர்களைவிட உண்மையான அறிக்கை என்பதும் தெரிந்திருக்கும். அவர்களது கொடியையும் மதிக்கிறேன்! அது அவர்களது! அது அவர்களுக்கு - மறைவு குறித்து வணக்கம் செலுத்தும்போதோ அல்லது மதிப்பளிக்கும்போதோ கையாளப்படவேண்டியது. அவர்கள் நிகழ்வுகளில் அவற்றுக்கான மதிப்பளிப்பும் பயன்பாடும் இருக்கலாம்.

தற்போது நடைபெறும் மனித உரிமை கோரலுக்கான நடவடிக்கைகளில், தடியெடுக்கும் நிலையில் உள்ளவர் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியையும் எடுத்து வைத்துக்கொண்டு செல்கின்றனர். 

இந்தச் செயற்பட்டை யார் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. த.ஈ.வி.புலிகளின் கொடியைக் கையில் வைத்துக்கொண்டு, அதே நேரம் சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கையையும் வைத்துக்கொண்டு நிற்பது சரியா? என்பதை உரைத்துப் பார்க்கச் சொல்கிறேன்.  இப்படி நிற்பதில் எவ்விதமான அளைவைசார், அறிவுசார் தெளிவும் தமிழர் தரப்புக்கு இருப்பதாகப் படவில்லை. இவை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் ஏன்?, த.ஈ.வி.புலிகளுக்குமேகூட எவ்வித நன்மையும் தரப்போவதில்லை.

அய்.நா மன்றத்தின் மனித உரிமைப்பிரிவின் அறிக்கை 2002 முதல் 2009 வரையான காலப்பகுதியில் நடந்த சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், ஆட்கடத்தல், சிறார் படைச்சேர்ப்பு, பொதுமக்கள் சொத்துக்களை முறையற்றுக் கையகப்படுத்தல் என்பவற்றில் குறிப்பாகத் த.ஈ.வி.புலிகளையும் குற்றம் சாட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே!


ஆனால் 2002 முதல் 2011 வரையான காலப்பகுதி முழுவதும் சிங்கள இனவாத அரசுகளினதும், ராணுவங்களினதும் நடவடிக்கைகள் அனைத்தும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன. இத்தோடு துணை ராணுவக் குழுக்களும் உள்ளடங்குவன.

2009 வரை நடந்த அனைத்து மனித உரிமை மீறல்களும் சிறிலங்கா அரசு தரப்பு, த.ஈ.வி.புலிகள், துணை இராணுவக்குழுக்கள் அனைவர் மீதுமானவை. அதன் பிறகு வரும் 2009 நடுப் பகுதிமுதல் 2011 வரை நடந்த மனித உரிமை மீறல் குற்றங்கள் அனைத்தும் சிறிலங்கா அரசு, துணை ராணுவக்குழுக்கள் மீதானவை. தமிழர் தரப்பு கேட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச விசாரணை வழியாக - பிந்திய இரு தரப்புக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க எது தந்திரமான வழி? என முன்வைப்பீர்கள்? தமிழ் மக்களே!

2009 மேயில், அதுவரை நடந்த தமிழருக்கும் சிங்களவருக்குமான - த.ஈ.வி.புலிகளுக்கும் சிங்களப் பேரினவாத அரசுகளுக்கு இடையிலுமான உள்நாட்டுப்போர் உலகின் பிற பல நாடுகளின் கூட்டணியினால் ஒடுக்கப்பட்டது. அதன்பின்பு வந்த நாட்களில் கனடாவின் கிழமை ஏடு ஒன்றில் தமிழர்கள் ‘தந்திரம் பழகவேண்டும்’ என்ற நோக்கில் ஓர் விரிவான கட்டுரையும் எழுதி வைத்தேன். எமது சந்ததி தந்திரத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காக… மூர்க்கத்தனமாக மீண்டும் மீண்டும் மோதிக்கொள்வதுதான் வீரமா? வீரம் என்பது தந்திரம், அறிவுசார் நுட்பத்துடன் சேர்ந்ததும் வெற்றியை நோக்கியதும் அல்லவா? அதையேதான மீண்டும் முன்வைக்கிறேன்.

சிங்களப்பேரினவாத அரசுகளின் தவறுகளுக்கு ஆதரவாக யாரும் சிங்கக் கொடியுடன் இன்று வந்து நிற்கவில்லை. அவர்கள் வந்து சிங்கக் கொடியுடன் மனித உரிமை பற்றிப் பேசவில்லை.  அவர்கள் தந்திரத்துடன் நடந்துகொள்கிறார்கள். சிங்களத்தின் - இனவாதத்தின் கொடூரத்தை தனியொரு, குறிப்பிட்ட காலச் சிங்கள ஆட்சிக்குரியதாக  மட்டும் கைமாற்றி விட்டுவிடுகிறார்கள். இப்போது இருப்பது முன்னிலிருந்தவற்றைவிட முற்றிலும் வேறுபட்ட சிறிலங்காவும் ஆட்சியும் என்கிறார்கள்! அதை உலகை நம்பவும் வைக்கிறார்கள்.

துணை இராணுவக்குழுக்களின் ஆதரவாளர்கள் - இவர்களும் முன்னாள் தமிழர் தேசிய விடுதலைப் போராட்டக் குழுக்களாக இருக்கும் பட்சத்தில் தத்தமது கொடியுடன் வந்து சுவிசில் நின்று இலங்கைமீதான போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்கலாமா?

வெளி உலகத்துக்கு குற்றஞ் செய்த மூன்று தரப்புமே வந்து தத்தமது கொடியுடன் நிற்கிறார்களே! மனித உரிமைபற்றிப் பேசுகிறார்களே என ஆச்சரியந்தான் ஏற்படும்.

சரி ஒரு வாதத்துக்காக பின்வருமாறு வைத்துக்கொள்வோம்: ‘போர்க்குற்ற விசாரணையில் 2009 மே வரைக்குமான மனித உரிமை மீறல்கள் குறித்து புலிகள் தரப்புக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்பது முன்வைக்கப்படுகிறது. தற்போது த.ஈ.வி.புலிகள்; அமைப்பு எவ்வித கட்டமைப்பும் அற்றது. ஆக, மிஞ்சியுள்ளது இந்தப் புலிக்கொடியுடன் வருபவர்கள் தான் என்று அவர்களைத் தேடிப்பிடித்துத் தண்டனை கொடுக்கலாமா? கொடுக்கச் சொல்லாமா? (அதற்கெல்லாம் 2009 மேக்கு பிற்பாடு, நாம்தான் உண்மையான த.ஈ.வி.புலிகளுடைய வாரிசு என்று குழாய்ச்சண்டை போட்ட ஏதாவது ஒரு குழு பொறுப்பேற்க வராமலா போய்விடப்போகிறது?) உண்மையில் த.ஈ.வி.புலிகளின் கொடியைப் பொறுப்பற்ற வகையில் தற்போது காவித்திரியும் இந்தக் ‘கொடிப்புலிகள்’ (3.) தங்களையும் குற்றவிசாரணைக்கு உட்படுத்துமாறு கேட்கிறார்களோ?!

மற்றொன்று, கொடி பிடிப்பது பற்றிய உணர்ச்சியாகப் பேசி ஆர்வத்தை தூண்டிவிடுவது. ஆனால் இவ்வாறு தூண்டிவிடும் யாரும் கொடிபிடித்தததைப் பார்க்கமுடியாது. பதிலாக உணர்ச்சிகரமான ஏமாற்றுப் பேச்சுக்களால் சுமுகமான, புத்திசாலித்தனமான, தந்திரமான அரசியற் சூழலை இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதைக் கெடுக்கிறார்கள், தடுக்கிறார்கள்.
அவர்களோ, வரலாற்றில், மகாவம்சத்தின் அடுத்த பதிப்பை, தமிழர்களுக்கு எதிராக எழுதத் தயாராகிவிட்டார்கள். ஆம்! தமிழர்கள் தங்கள் வரலாற்றை மற்றவர்கள் எழுதி வைத்தவற்றிலிருந்துதானே இவ்வளவு நாளும் தொகுத்து வருகிறோம். வரலாற்றைப் பதிவாக்குவதற்கும் வரலாற்றில் வாழ்வதற்கும் தமிழர் நாம் சிந்திப்பதில்லை, முனைப்பு காட்டுவதில்லை. 
வழக்கம்போல மீண்டும் ஓர் தோல்வியையே அவர்களின் மகாவம்சப் பதிவில் இருந்து நமது வரலாறாக விட்டுவைக்கிறோம். எமது சந்ததி கற்றுக்கொள்வதற்கு அவர்கள் வரலாற்றுப்பதிவை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

புத்தியுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். நாம் குறைந்தளவு நமது பிள்ளைகளையாவது புத்தியுடன் இருக்க விடுவோமா?!

இன்று த.ஈ.வி.புலிகளின்; கொடிகளைப் பிடிக்கத் தூண்டிவிடும் கூட்டத்தினரின் பிள்ளைகள் பெரும்பாலோருக்கு தமிழ் பேசவும் எழுதவும் வாசிக்கவும் தெரியாது என்பது வேடிக்கையானது. கொடிகளைப் பிடிக்கத்தூண்டுவோர் தங்கள் உசுப்பல்களை தமிழிற்கும் தமிழினத்திற்கும் நன்மை பயக்கும் நோக்கில் செய்வதில்லை. குறுகிய நோக்கில் உணர்ச்சிபடப்பேசி அதில் புழகாங்கிதச் சுகம்காணும் அற்பர்கள்?

இலங்கையில் காணப்படும் எந்தக்கொடியுமே கொடிக்குரிய சிறப்புக்கள் உடையதல்ல என்பது மற்றொரு வேடிக்கையான பக்கம். எளிமையான வடிவமைப்புடைய கொடியே சிறப்பான அறிவுடைய சமூகத்தின் வெளிப்பாடு. அந்தவகையிலும் ஓர் அழகான, சிறப்பான கொடியென்றுகூட எதையும் சொல்லமுடியாதவற்றைப் பிடித்துக்கொண்டு நிற்பதும் தேவையானதா என்றும் பார்க்கலாம். உலகத்தில் உள்ள கொடிகளில் மிகச்சிறப்பான வடிவமைப்புடைய கொடி கனடா என்னும் நாட்டுடையதாம்! (4.)

சுற்றி வளைத்துப் பார்த்தாலும் நேரடியாகப் பார்த்தாலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியை வைத்துக்கொண்டு மனிதஉரிமை விசாரணை கோருவது இருபக்கத்துக்கான நன்மைகளையும் கெடுத்துவிடும் என்பதைப் புரிந்து கொண்டால் சரியே!

“உலகப் பொது நீரோட்டத்தோடு ஓடுவது போல ஓடி இடையில் சுழித்துக் கொண்டோடி தமது கனவுகளை வென்றெடுப்பதற்குரிய ஒரு கூட்டுப் பொறிமுறையை தமிழ் மக்கள் வகுத்துக்கொள்ள வேண்டும்.” (5.)

வெறுமனே கறுப்புக் கொடியை மட்டும் பிடித்துக்கொண்டு நமது கோரிக்கைகளைச் சொல்லலாமே!

-->

-->
Reference:
2. https://www.facebook.com/raphelcanada
3. ‘nfhbg;Gyp’ nghUSf;Fg; ghu;f;f> Tamil Lexicon.1982. Madras:University of Madras. Vol III, p.1135.

4.( Roman Mars, http
://www.ted.com/talks/roman_mars_why_city_flags_may_be_the_worst_ designed_thing_you_ve_never_noticed , 2015 Sept 28, 7:00 am)

(5.) (Nilanthan,http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124312/language/ta-IN/----.aspx#.Vgdr9W-mMWc.facebook, 26 Sept 2015, 12.50 p.m)