I am a part of the Universe, try to find is there a parallel. பெருவெளியின் பகுதியாய் ...

வெள்ளி, பிப்ரவரி 27, 2015

எனக்குக் கிடைத்த மிகப்பெரிய சவாரி - வாடகைக்கார் தேவதைகள் - 2

எனக்குக் கிடைத்த மிகப்பெரிய சவாரி

ரொரன்ரோ நகரத்தைப் பற்றித் தெளிவான படம் மனதில் விழாமல் இந்த வாடைகைக்கார் புதினங்களில் பாதியை சுவையாகச் சொல்லித் தரமுடியாதுபோய்விடும். கனடாவின் மிகப்பெரிய ஏரிஒன்றின் மடியில் ரொரன்ரோ தங்கிநிற்கிறது.

கிழக்கு மேற்காக லேசாக வளைந்து பரவும் இந்தப் பெரிய ஏரியின் வடகரையின் - ஏறக்குறயை நடுவே - ரொரன்ரோவின் மைய அச்சுத் துவங்குகிறது. பாதியாக வெட்டப்பட்ட எலுமிச்சையைக் கவிழ்த்து வைத்ததாகக் கற்பனை செய்தால் அதன் வெட்டப்பட்ட பகுதி ஏரிக் கரையாகவும் எலுமிச்சையின் தோல்புறம் நாலுபக்கம் விரிவதாகவும் இந்த நகரம் அமைந்திருக்கிறது.

எலுமிச்சையின் நட்டநடுவில் உள்ள காம்பு போல நிலைக்குத்தாக வடக்கு நோக்கி ஓர் தெரு புறப்படுகிறது. இந்தத் தெருவிற்கு 'யங்' தெரு என்று பெயர். ஒரு காலத்தில் உலகின் அதி நீளமான தெரு இதுவாகத்தான் இருந்தது. தற்போது இந்த தெருவின் ஒரு முனையில் சிறய பகுதிக்குப் பெயரை மாற்றிவிட்டார்கள். அது உலகளாவிய நீளத்தைக் குறைத்துவிட்டது. ஆனாலும் ஒன்றும் யங் வீதி தனது உலகச் சிறப்பை இழந்துவிடவில்லை.

இந்த யங் தெருவிற்குக் கிழக்காவும் மேற்காகவும் பிரித்தே நகரத்தை அடையாளம் காணுவார்கள். இதற்கு இணையாகப் புறப்படும் பல தெருக்கள் நெடுக்குத்தாகவும் சில கதிர்களாகவும் விரியும். கிடையாக வெட்டிக்கொண்டு பல வீதிகள் செல்லும். இங்கு 90 விழுக்காடு வீதிகள் அனைத்தும் ஒன்றை ஒன்று 90 பாகையில் குறுக்கறுத்துச் செல்லபவை. நேர்கோடானவை. இப்போது புரிகிறதா? இந்த ஊரில் வாடகை வண்டி ஓட்டுவது எவ்வளவு எளிது என்பதும் எப்படி என்னைப்போன்றவர்கள் இதில் நிலைத்திருக்கிறோம் என்பதும்.

மக்கள் நிறைந்த அதிக நடமாட்டமாக உள்ள வெள்ளி சனிக்கிழமைகளில் நகரின் நடுப்பகுதியில் களியாட வந்திருக்கும் யுவன் யுவதிகளை அவர்கள் வீட்டில் கொண்டு கரைசேர்ப்பதுதான் எமது - வாடகை வண்டிக்காரர்களின் - தலையான கடமையாக இருக்கும். இதில் நகரின் கிழக்கிலிருந்து மேற்குக்கும் அல்லது மறுதலையாகவும் நகரின் மத்தியில் இருந்து வெளிப்புறத்துக்கும்  கொண்டு சேர்க்கவேண்டும்.

கேளிக்கையை நோக்கி நகரின் மத்திக்கு வரும்போது பெரும்பாலும் வேறு வழிவகைகளில் வந்து விடுவார்கள். வந்தபின் உண்டு, குடித்து என்று ஆனபின் அனைவரும் வாடகை வண்டி வேண்டியிருக்கும்.

நகரின் ஒரு கோடியில் இருந்து மற்றக் கோடியில் உள்ள எல்லைப்புற நகர்களுக்குச் செல்ல யாராவது ஏறிவிட்டால் அது பெயரிய வருமானச் சவாரியாக இருக்கும். சராசரியாக அதிகுறைந்த நிலை மீட்டரில் 4.25 டாலர்கள் என்றிருக்கும். சிறிய தூர ஓட்டங்கள், கடைக்குப் போவது, அடுத்த சந்திக்குப் போவது போன்றன 8 முதல் 15 டாலர்கள் வரை வரலாம். இவை அடிக்கடி இடைவிடாமல் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை வந்தாலும் அன்று நல்ல வடிரும்படிஎன்றுதான் பொருள். ஆனால் ஒவ்வொருநாளும் இதையெல்லாம் செய்வதற்கு யாருக்குத் தேவை! இந்தக் குளிரில் இதை ஒரு மாதத்திற்கு ஒரு முறைதான் செய்யப் பார்ப்பார்கள்.

ஏதாவது ஓரு ஓட்டம் ரொரன்ரோவின் ஏரிக்குத் தண்ணீரை வளங்கும் நயாகரா அருவியை நோக்கிப் போனாலோ அல்லது ஏரியின் கிழக்குக் கரையின் முனையில் இருக்கும் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவுக்கு போனாலோ அது லாட்டரி விழுந்த மாதிரி 300 முதல் டாலர்கள் என்று கணக்குப் பண்ணலாம். அனால் தெரியும்தானே!  லாட்டரி யாருக்கும் விழுவதில்லை. லாட்டரி  விழும் விழும் என்று வாழ்க்கை ஓட்டப்படுகிறது. அப்படித்தான் எப்பவாவது ஒரு லாட்டரி 300 டாலருக்கு விழும் என்று காக்காய் மாதிரி பறந்துகொண்டிருப்பார்கள்.

இந்த மாதிரி, ஒரு லாட்டரிக்கான அறிகுறியும் இல்லாத ஒரு நாளில் நகரின் வடபுறத்தில் உளன்று கொண்டிருந்தேன். யங் வீதியின் இருமருங்கும் உள்ள கிளை வீதிகள் ரொரன்ரோ நகரத்தின் பணக்காரர்களை அவர்களின் குடியிருப்புக்களை, கடைகளை, வணிக நிறுவனங்களைப் பலவிதத்திலும் கொண்டிருக்கம்.

டேவிஸ் வில் என்கின்ற வீதியில் சென்று தேனீர் குடிக்கும் கடையை நோக்கி வண்டியைத் திருப்ப நினைத்தேன். ஓர் முதிய சீமாட்டி வண்டியில் ஏறுவதற்கு துணை வீதியி;ல இருந்து கையைக் காட்டியபடிக்கு வந்ததுகொண்டிருந்தார்.

'சரி எங்கோ பல்பொருள் அங்காடியை நோக்கிய பயணமாக இருக்கும். பெரும்பாலும் இந்த நேரத்தில் பூனை அல்லது நாய்க்கான உணவை வாங்க வருகிறாராக்கும்' என்று நினைத்தேன். அது ஓர் இளவேனில் மாலை. ஏப்பிரல் மாதம் தொடக்கப் பகுதியாய் இருக்கலாம்.

'நீ வேறு யாருக்கும் காத்திருக்கிறாயா?'

'இல்லை.'

'அப்பாடா! நான் அவசரமாக ஜேம்ஸ் ஐப் பார்க்கவேண்டும். வருகிறாயா?'

'எங்கே அம்மணி?'

'ஹமில்ரன்'

'அடிச்சான்ரா லக்கி பிரைஸ்' என்று மனம் எம்பிக் குதித்தது.  ஆனாலும் இந்த மாதிரி வேளைகளில் முகவரி அல்லலது இரண்டு வீதிகளின் சந்திப்பைக் கேட்டுக்கொள்வது இலக்கை நோக்கி வண்டி ஓட்ட இலகுவாக இருக்கும். ஹமில்ரன் நயாகரா அருவிக்குப்போகும் வழியின் பாதி தூரத்தில் இருக்கிறது! அதாவது தொழில்முறையில் சொன்னால் 150 டாலர் துரத்தில்!

'ஏன் சந்தியைச் சொல்ல. இதுதான் முகவரி' என்று வீதியின் பெயரை எண்ணுடன் சொன்னார்.

முகவரியை எனது ஜி. பி.எஸ் இல் போட்டதும் ஏறக்குறைய ஒன்றேகால் மணிநேரம் ஆகலாம் என்று காட்டியது. கிட்டமுட்ட 80 கிலோ மீற்றர் இருக்கலாம். இருக்கும் சந்து பொந்துகளில் போய் குறிப்பிட்ட இடத்தில் இறக்கும் வரைக்கும் சேர்த்து எப்பிடியும் ஓர் 150 டாலர் தேறலாம். இதில் கைப்பணம் (ரிப்)அதன் அளவை மாற்றிவிடும். சிலவேளைகளில் இன்னும் பத்து டாலர்கள் அதிகமாகலாம்.

'நான் பெருவழியில் போகலாமா?'

இது ஓர் பொதுவான கேள்வி. 'ஐவேயில்' போவதற்கும் பயணியின் அனுமதியை அறிந்து கொள்வது. மீட்டரைத் தட்டிவிட்டு பறக்க ஆரம்பித்தேன். அவனியூ வீதியில் ஏறி அப்படியே போய் பெருவழி 401 இல் மேற்கு நோக்கி பயணம் தொடங்கியது. இந்த அம்மணி ஓர் பணக்காரியாய் இருக்கவேண்டும். உடைகளும் நடையுடைபாவனை பேச்சுக்களும் அப்படித்தான் தென்பட்டன.

'இன்று நல்ல வாசிதான்.' எனது நிறுவனம் ஓரு ஓட்டத்தைத் தந்தால் அதைத் தேடிப்பிடித்து போய் எடுப்பதற்கே 30 நிமிசம் ஆகும். எங்களுக்கு ஓட்டத்தை வயர்லசின் மூலம்தான் வழங்குவார்கள். இன்ரர்நெற் தொலைபேசி எல்லாம் வந்தும் நிறுவனத்தின் கட்டுக்கோப்புக்காக அதை வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட பகுதியில் முதன்மையாய் வந்து நிற்கும் வண்டியை அழைத்து கதவு எண் வீதியின் பெயர் ஆளின் பெயரைச் சொல்லுவார்கள்.

நாங்கள் 'ரோஜர்' என்று சொல்லவேண்டும். ரோஜர் என்று சொல்வதன்வழி அந்தக் குறிப்பிட்ட ஓட்டத்தை எடுத்து நடத்தி முடிக்க ஒத்துக்கொள்கிறேன் என்பது நிறுவன விதி. அதை மீறினால் 4 மணித்தியாலம் முதல் 1 நாள் வரை சஸ்பெண்ட செய்யப்படலாம். சிலர் வழியில் வேறு ஒரு ஆளைக் கண்டு கொடுக்கின்ற ஓட்டத்தை எடுத்து முடிக்காமல் போனால் என்று இந்த ரோஜர் உறுதி மொழி இருக்கிறது, அவர்களுக்கு ஆப்பு வைக்க. இது எதுவும் இல்லாமல் சுளையாய் கையைக் காட்டித் தானாய்க் காரில் ஏறி அமர்ந்திருக்கும் இந்த 150 டாலரை என்னவென்பது!

வயர்லெஸ்சில் எங்கள் இலங்கை ஆட்கள் கில்லாடிகள். நாங்கள் எத்தனை இயக்கத்துக்கு ஊடாக வயர்லெசோடு பிறந்து வளர்ந்திருக்கிறோம். பிற நாட்டுக்கார்கள் கொஞ்சம் சிரமப்பட்டு வயர்லசில் சரியாக தொடர்பு கொள்ளமுடியாமல் திட்டு வாங்குவார்கள். வயர்லெஸ் கிளிக் செய்ததும் 1 செக்ண்ட் இடைவெளிக்குப் பின்தான் மறு முனயில் கேட்கும் என்ற பொது - வயர்லெஸ் சிறப்பு - அறிவு இல்லாதவர்கள் பலவண்டி ஒட்டிகள்.

இந்த வயர்லெஸை தொந்தரவு என்று ஒருதலைப்பட்சமாக நினைக்கவும் கூடாது. பலவேளகைளில் ஆபத்துக்களிலிருந்து பலரைக் காப்பாற்றியிருக்கிறது. வயர்லசில் "அவசர உதவி தேவை" என்று அழைத்தால் நிறுவனத்தின் மறுமுனை உடனேயே காவல்துறையுடன் தொடர்புபடுத்திவிடும். காவல்துறை மறுமுனையில் கேட்கிறது என்பதனால் அட்டகாசம் செய்பவர்கள் அடங்கிப் பெரும்பாலும் வெளியேறிவிடுவார்கள். போதாக்குறைக்கு சில ஆண்டுகளாக "மோசன் கப்சர்" புகைப்படக் கருவியும் உண்டு. (இது சங்கர் படம் எடுக்க முன்னதாகவே, அந்தக் காலத்திலேயே, எங்கள் ஊரு டாக்சியில் உண்டு) ஓட்டுனரை நெருங்கி பயணி வந்தால் கருவியில் தட்டுப்படும். வேகமான அசைவுகள் செய்தால் அவை பலப்பல புகைப்படங்களாக எடுக்கப்படும். இவை பதியப்பட்டு சேமிக்கப்படும். தேவை என்றால் காவல்துறை அதைப் பார்க்கலாம் என்ற பாதுகாப்பு ஏற்பாடு ரொரன்ரோவில் உள்ள வாடகை வண்டிகளில் உள்ளது.  அதனால் வயெர்லசும் கமராவும் எங்கள் பாதுகாப்பு அரண்கள் - இரண்டு கண்கள்.

வயர்லெஸ் எப்பவும் லேசாக ஒலித்துக்கொண்டே இருக்கும். பல பயணிகள் அதை நிறுத்து என்பார்கள். நிறுவன விதிப்படி அது எப்போதும் உயிருடன் இருக்கவேண்டும். இன்று கணனி மயமான, சில வேறு வாடகை வண்டி நிறுவனங்கள், சிறிய தொகை வண்டிகளை வைத்து ஓடுகின்றனதான். அவற்றில் வயர்லெஸ் முதன்மை நடைமுறையில் இல்லை.


ரொரன்ரோவின் எல்லையைக் கடந்து, பெருவழியில் விமான நிலையம் கடந்து போய்க்கொண்டிருந்தேன். ஹமில்ரனுக்கு இன்னும் செல்வதற்கு பாதி தூரம் உள்ளது.

'நகரத்தில் எல்லை தாண்டியாயிற்று. இப்படியே இந்த அம்மணியை இறக்கிவிட்டால் திரும்பி வேகமாக வந்து சில சின்ன ஓட்டங்கள் பெற்றாலும் இன்றைய வியாழக்கிழமை சுகமாக நிறைவும் என்று மனம் மகிழ்ச்சியில்.'

அம்மணி "இன்னும் எத்தினை நேரம் ஆகலாம் ?" என்றார்.

"பெரும்பாலும் 30 நிமிடம் வரைக்கும்" என்றேன். ஏறக்குறைய அப்படித்தான்.


"ஜேம்ஸ்ஐப் பார்த்து நிறைய நாள். கவலையாக இருக்கிறது." என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்.

நான் இந்த உலகத்தை நினைத்துக் கொண்டேன். இப்படிக் கணவனையும் மனைவியையும் இவ்வளவு தூரத்தில் வயதான காலத்தில் பிரித்து வைப்பது கொடுமை என்று உணராத சமூகமும் குடும்பமும் இந்த நாட்டில். இந்த அம்மணியைப் பார்த்தால் படித்தவர் மாதிரி இருக்கிறது. ஏன் இந்தப் பிள்கைளுக்கு அறிவில்லையா.

ஒரு வேளை அந்தக் கணவருக்கு உடல்நிலை சரியில்லையாயினும் இருவரையும் ஒன்றாக வைத்துப் பார்க்கக் கனடாவின் சமூகநலத்துறைகள் உதவி செய்யுமே... கவலையாகவும் இருந்தது. தனது கணவனைப் பார்க்க இவ்வளவு தூரம் வாடகைக்காரில் செல்லும் ஓர் வயதான மனைவி என்பதை நினைக்க கண்கள் துளிர்க்த்தான் செய்யதது.


இப்போது 401 பெருவழியில் இருந்து 403 இற்கு மாறிக்கொண்டிருந்தேன். இதிலிருந்துதான் பேரரசியின் பெருவழிக்கு மாறவேண்டும். நயாகராவுக்குச் செல்லும் பெருவழிக்குப் பேரரசிசியின் பெருவழி என்றுதான் (QEW)இங்கு பெயர் வைத்திருக்கிறார்கள். அதுதான் நயாகராவுக்குச் செல்லும்.  அதிலிருந்து பிரிந்து ஹமில்ரனுக்கும் செல்லும்...

இந்த நேரம் வயர்லெசில் இந்த அறிவிப்பைக் கேளுங்கள் என்று எதையோ திருப்பித் திருப்பிச் சொன்னார்கள். சற்று சத்தத்தை அதிகரித்தேன். பெரும்பாலும் ''நேற்று இந்த இடத்தில் இருந்து அந்த இடத்திற்குச் சென்றவர் தனது கைப்பையை வண்டியில் விட்டுவிட்டார், செருப்பை மறந்துவிட்டார், தொலைபேசியைக் காணவில்லை...அது உங்கள் வண்டியா? கண்டால் சொல்லுங்கள்.'' என்பது போன்ற அறிவிப்புக்கள் இருக்கும். அவை சுவையாகவும் இருக்கும்.

முந்தநாள் போனஅறிவிப்பு மிகவும் சுவாரசியம். எதோ ஓர் 'பிராண்ட்' பெயரில் உள்ள லிப்ஸ்டிக்கை வண்டியில் விட்டுவிட்டார்கள். அதன் விலை அதிகமாம். கண்டுபிடித்தவர் கொண்டு வந்து தந்தால் 40 டாலர் சன்மானம் என்று வேறு சொன்னார்கள். அப்படியெல்லாம் ஒரு லிப்ஸ்டிக்கா?

இப்போது அறிவிப்பு திரும்பவும். ..

"லேசான நரைத்த தலையுடன் ஓர் பெண்மணி. வயதானவர்... எமது நிறுவனத்தின் வண்டியில் ஏறிப் போயிருக்கிறார். அவரை வைத்திருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்."

திரும்பவும் சொன்னார்கள். இப்போது " 'டேவிஸ் வில்' வீதி "என்றார்கள். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. என்ன நம்மாள் போல இருக்கே. எதாவது கிரிமினல் சிக்கலா? இப்படி மாட்டிவிட்டோமே என்று நினைத்தேன்.


வயர்லைசை  எடுத்து 'வண்டி எண் 5536' என்றேன்.

"வண்டி எண் 5536 மேலே சொல்" என்றார்கள்.

"நான் 30 நமிடத்திற்கு முன் ஓர் அம்ணணியை ஏற்றியிருக்கிறேன். டேவிஸ் வில் வீதியில் வைத்து. வயதானவர்." கண்ணாடியில் பின்னால் பார்த்தேன். அம்மணி எவ்வித சலனமும் அற்று இருந்தார்.

எனது நிறுவனத்தின் தொடர்பாளர் ''உடனடியாக வண்டியைத் திருப்பிக்கொண்டு டேவிஸ் வில்' வீதி அக்கேசயா வீதிச் சந்திக்கு வரவும். காவல்துறை அழைக்கிறது" என்றார்கள். நான் இப்போது டோர்வால் வீதி சந்திப்பிற்கு அண்மையில் பெருவழியில் இருந்தேன். அப்படியே பெருவழியை விட்டு வெளியேறி மீண்டும் வந்த வழியே கிழக்கு நோக்கி பயணமானேன்.

அந்தம்மா அசையாமல் சலனமற்று இருக்கிறார்.

"இதென்ன இழவடா? இந்த நேரத்தையும் காசையும் யார் தருவார்?  வீணாக எரிபொருள்வேறு செலவு.!" ஆனால் இந்தம்மாள் எனக்கு எந்த ஆபத்தையும் தருவதாக இல்லை. அப்படி எந்த நோக்கமும் இல்லை. என்னதான் சிக்கலாக இருக்கும்?

வயர்லெஸ் செய்தியைக் கேட்டதாகவும் காட்டிக்கொள்ளவில்லை. சரி போகும் வரைக்கும் பேசி வைப்போமே என்று கேட்டேன்.

"அம்மணி! ஜேம்ஸ் அய்யா எங்கே இருக்கிறார்?"

"அதுதான் முகவரி தந்தேனே! ஹமில்ரனில்" உறுதியாகவே சொன்னார்.

என்னவோ எதோ. காவல்துறை தலையீடு என் தலைக்கு வராமல் இருந்தால் போதும் என்று போய்க்கொண்டிருந்தேன். இருட்டிவிட்டது.


வேகமாக விரைந்து வந்து குறிப்பிட்ட சந்திக்கு வந்தேன். அந்த முப்பது நிமிடத்தை கடப்பது பெரும் சிரமமாக இருந்தது. இந்த அம்மணி பின்னால் இருந்து என்ன செய்யப்போகிறாரோ என்ற பயம், எந்த இடத்தில் காவல்துறை என்னைத், தொடர்பு படுத்தும் என்ற தலைவலி....எனது பணத்தையும் நேரத்தையும் யார் தருவார்கள் என்கிற ஆதங்கம்....


குறிப்பிட்ட அந்தச் சந்தி முலையில் ஓர் வீட்டில் ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். காவல்துறை வண்டி ஒன்று நின்றுகொண்டிருந்தது. காவல்துறை அதிகாரி என்னை நோக்கிவந்து , வண்டிக்குள்ளே பார்த்து, "ஒன்றுமில்லை. ஆம். இவர்தான். இவரைத்தான் தேடினோம்" என்றார்.

அந்த வீட்டில் இருந்தவர்கள் வந்தார்கள். மீட்டரில் இருந்த தொண்ணூற்றுச் சொச்சம் பணத்தை "மன்னிச்சுக்கொள் வாடகைக்கார் ஓட்டியே" என்று திரும்பத்திரும்ப மன்னிப்புக் கேட்டபடி தந்தார்கள்.

நமக்கு வந்தவரைக்கும் போதும் என்று காவல்துறை ஆட்களைப் பார்த்தேன். அவர்களோ, "எல்லாம் சரி. நீ போகலாம்" என்றார்கள்.

இப்போது வயர்லசில் நிறுவனம் அழைத்தது!

"வண்டி எண் 5536"

"வண்டி எண் 5536 யங் மற்றும் டேவிஸ் வில் சந்தியில்"

இதுதான் நாங்கள் பதிலளிக்கும் முறை. எங்கள் வண்டி அழைக்கப்பட்டால் அது எந்தச் சந்தியில் நிற்கிறது என்று அறியத்தரவேண்டும். தெருவில் நிறப்பதுதான் தொழில் என்றாகிவிட்டபின்பு எந்தச் சந்தியில் நின்றால் என்ன?

'பாராட்டுக்கள். பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு வந்ததற்கு. நல்லவேலை செய்திருக்கிறாய்'

நான் சரி என்றேன்! "  'ரென் ஃபோர்' நன்றி"  என்று விட்டு வைத்துவிட்டேன். என்ன பாராட்டு? நாய் பட்ட பாடு யாருக்குத் தெரியும். எல்லாம் தெரிந்தது மாதிரி பணிமனையில் இருந்து வயர்லசில் பாராட்டுகிறார்கள். இதுதான் பியுராக்கிரசியின் ஒரு வடிவம் என்று திட்டிக்கொண்டிருந்தேன்.

தற்போது எனது வாடகை வண்டிக்  கூட்டாளி வேந்தன் தொலைபேசியில் கூப்பிட்டார்.

"எப்படிச் சவாரி. நல்ல காசுபோல..." அவர் எல்லாத்தையும் வயர்லசில் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். வயர்லசில் மற்றவர்கள் படும் பாட்டைக் கேட்பது நல்ல பொழுதுபோக்கும்தான். நான் சிரித்தேன்.


"அம்மணியை எங்க கொண்டு போனநீங்கள் என்று தெரியுமோ?"

"அவவின் கணவர் ஜேம்ஸ்ஐப் பார்க்கப் போவதாகச் சொன்னா."

"அவர் எங்க இருக்கிறார் தெரியுமோ?" சற்று இடைவெளிவிட்டு "ஜி.பி.எஸ்.ஐப் பாருங்கோ தெரியும். இவவை இதுக்கு முதல்லயயும் சிலர் ஹமில்ரன் வரைக்கும்கூட கொண்டுபோயிருக்கினம்."

ஜி.பி.எஸ் பொதுவாகப் பொதுப் படமாகக் காட்டும். நாமாக நுணுகிப் பேனால்தான் விரிவான தகவல்ளைக் காட்டும். பெண்மணி தந்த முகவரியின் அடையவேண்டிய இறுதி இடத்தை பெரிதாக்கிப் பெரிதாக்கிப் பார்த்தேன்.


அது ஓர் இடுகாடு!


தேவதைகள் இடுகாட்டுக்கும் போகும்.





சனி, பிப்ரவரி 21, 2015

வாடகைக்கார் தேவதைகள் - நாட்குறிப்பு 1


வாடகைக்கார் தேவதைகள் - நாட்குறிப்பு 1


பட்டறிவுகளைத் தொடராக எழுதும் எண்ணம் நேற்று வரை வந்ததில்லை.

நேற்று - இரவு - முதல்நாள் வாடகை வண்டியில் ஏறிய ஒருவர் ஓர் இசைக்கருவியுடன் வந்தார்.  ரொரன்ரோவின் ஒரு பெரிய ஓட்டல் வாசலில் தொற்றிக்கொண்டவர்.  இசைக்கருவிகள் சில அவை பெட்டியுள் இருக்கும்போது மயக்கமான தோற்றத்தைத்தரும். எனது வண்டியில் 96.3 பண்பலை போய்க்கொண்டிருந்தது. இது ரொரன்ரோப் பகுதிகளில் செவ்வியல் இசைக்கோர்வைகளை ஒலிபரப்பும் அலைவரி.

"இது என்ன இசைக்கருவி என்பதைக் கேட்டால் நீங்கள் ஒன்றும் நினைக்க மாட்டீர்களே?" என்று கேட்டுவைத்தேன்.

"அப்படியொன்றுமில்லை. இது சக்ஸஃபோன்"

"ஓ! அப்படியா? இங்க பாருங்கள். எனது மற்றைய விருப்பமான அலைவரிசை இதுதான்"  என்று ரொரன்ரோவின் 91.1 பண்பலை வரிசையைத் தட்டிவிட்டேன். இது ஜாஸ் இசைக்கென்று தனிச்சிறப்பாக இயங்கும் அலைவரிசை. ஜாஸ் இசையின் அடி நாதமே சக்ஸஃபோன்தான் என்பது அனவைருக்கும் தெரிந்திருக்கும்.

வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போது கண்ணாடியில் பயணிகளைப் பார்ப்பது பண்பல்ல என்ற விதியை வைத்திருக்கிறேன். அவரை ஓர் சிவப்பு விளக்கில் திரும்பிப் பார்த்தேன். புன்னகைத்தார்.

"இது ஆச்சரியம். ரொரன்ரோவின் வாடகை வண்டி ஒன்றில் செவ்வியல் இசையையும் விட்டால் ஜாஸ் ஐயும் கேட்பது ஆச்சரியம். நீ ( 'யூ' என்பதை ஆங்கிலத்தில் - பேச்சில் பயன்படுத்துவதை எப்படி மொழிமாற்றுவது என்பது பலநாள் போராட்டம். இந்த இடத்தில் நீயாகலாம்.) கொஞ்சம் விசயம் தெரிந்த ஆளாக இருக்கவேண்டும். அல்லது படித்திருக்கிறாய் என நினைக்கிறேன்."  தொடர்ந்து "ஒரு ஆள் கேட்கும் இசையை வைத்தே அவரின் அறிவின் திறத்தை அளவிடமுடியும்." என்றார்.

"அப்படி எப்படிச் சொல்லலாம். நாட்டார் இசைகள் பல இருக்கின்றன. அவற்றை வைத்துக்கொண்டு இசை சார் மக்களை எடைபோட முடியுமா?. செவ்வியல் இசைமட்டுமா உன்னதம்?"

"நான் ஓர் இசை ஆசிரியன். ஒரு தனியார் கல்லூரியில் இசை பயிற்றுவிக்கிறேன். ம்! இசை படிப்பித்தல் பயிற்றுவித்தல் - கல்லூரி - இதெல்லாம் தொடர்பற்றவை" சலித்துக்கொண்டார் என நினைக்கிறேன். "எனக்குத் தெரியும். நீ சொல்வது சரிதான். இசைக் கேட்பை மட்டும் வைத்து ஆட்களை வகைப்படுத்துவது பாகுபாடு காட்டுவதாகும்தான். ஆனாலும் சில வகை இசைகள்...." தொடரந்தார்.... "எப்படி இந்த வேலைக்கு வந்தாய்?"

சுருக்கமான அண்மைக்கால வரலாற்றைச் சொன்னேன்.

"உன்னைக்கொண்டு இந்த இடத்தில் சேர்த்ததற்காக கனடாவை நீ கோபப்படவில்லையா?"

"எப்படி? நாம்தான் தேர்ந்தெடுத்து வருகிறோம் - பாதுகாப்பான சொர்க்கம் என்கிறோம். கனடாவில் நான் மகிழ்வாயில்லை என்பது ஒரு தலைப்பட்சமாகத்தான் இருக்கும். குடும்பத்தில் இருந்துகொண்டு ஒருவர் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அல்லது குடும்பத்தில் மகிழ்ச்சியாய் இல்லை என்று கறுப்பு வெள்ளையாகச் சொல்ல முடியுமா?"
taxi stories toronto taxi driver memoire


இப்படிப் பேச்சு போனது. வாடகை வண்டி ஓட்டுபவர் மிகச் சிலரோடுதான் இவ்வாறு உரையாடிக்கொள்ளமுடியும். மற்றப்படி வடகை வண்டி ஓட்டுபவருக்கு உயிரும் மூளையும் இருப்பதாக ரொரன்ரோவில் யாரும் நினைப்பதில்லை என்பதையும் நினைவூட்டுவது என்கடமை.

"வாடகை வண்டியில் ஜாஸ் நம்பமுடியவில்லை" என்றார்.

"அய்யா! இதெல்லாம் எதற்கு? இந்த சிறிய பயணத்தில் இசைபற்றி ஏதாவது எனக்குச் சொல்லுங்களேன்! முடியுமானால், விருப்பமானால்"

"நான்தான் சொன்னேனே! நான் ஓர் இசை ஆசிரியன் என்று. உனக்கு என்ன அறிய வேண்டும்."

நாங்கள் போய்க்கொண்டிருக்கும் பயணம் அதிகம் போனல் மேலும் 10 நிமிடங்கள் இன்னும் எடுக்கலாம்.

"எப்படி இசையை ரசிப்பது என்று எனக்குச் சொல்லுங்களேன்"

"நீ ஏன் இந்த செவ்வியல் - ஜாஸ் கேட்கிறாய். நீ இசைக்கருவிகள் ஏதும் வாசிப்பாயா?"

"இல்லை. தமிழ்ப் புலத்தில் அந்தக்காலத்தில் இருந்தவர்கள் தந்த தேடல் உந்துதல்...பிறகு எனது நாட்டில் இருக்கும் ஓர் சிறந்த இசையமைப்பாளர் - இன்று 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார் - இளையராஜா என்பவர் - இங்கு ரொரன்ரோவிலும் வந்து இசைநிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்....இவையெல்லாம் சேர்ந்து இங்கு தள்ளிவிட்டது."

"அப்படியா? என்ன அறியவேண்டும்."

"இசையின் அடிப்படை என்ன?"

"இசை என்ற சொல் எப்படி உருவானது என்று தெரியுமா?"

"இல்லை....ஏதாவது கிரேக்க தோற்றமா?"

"கிட்டமுட்ட அப்படித்தான்.  Mu என்பது தயார் என்பதைக் குறிக்கும். Sico என்பது அறிவைக் குறிக்கும். அறிவின் தாய் என்பது இதன் பொருள்" என்றார். எவ்வளவு சரியோ "... அப்படியா ஆச்சரியம்" என்றேன். Reference

பைதோகரஸ்...இசைக்கவர்...ஒத்திசைவு.... என்று பலவற்றைச் சொன்னார். சொல்லும்போதே "இதில் எவ்வளவை நீ உள்ளெடுக்கிறாய் என்பது தெரியவில்லை. இது இயற்பியலோடு - பௌதீகத்தோடு தொடர்புடையது. நான்தான் சொன்னேனே... இசை ஓர் அறிவியல் என்று".

"எனக்கு கொஞ்சம் அறிவியல் பின்புலம் உண்டு. ஒரே சுரங்களில் இசையும் இரு கம்பிகள் அல்லது கருவிகள் ஒத்திசையும் என்பதை படித்திருக்கிறேன். ஆய்வுக்கூடத்தில் செய்து பார்த்திருக்கிறேன்" என்றேன்.


"அப்படியானால் நான் உனக்கு மற்றொன்றைச் சொல்கிறேன்"

"இசையில் தட்டப்படும் ஒரு புள்ளிக்கு 'நோட்' என்று பெயர். அது எந்த நோட்டாய் இருக்கட்டும். நாம் அதை வருடுகிறோம் அல்லது தட்டுகிறோம் என்று வைப்போமே...அப்போது அது ஒரு நோட்தான். ஒரே யொரு நோட்தான். ஆனால் அது உள்ளே பல நோட்களைக் கொண்டது"

"எனக்குத் தெரியாத இசை உண்மையிது. பலதடவை எத்தனையோ வகை இசைக் கேட்டிருக்கிறோம். ஆனால் ஓர் புள்ளி பல புள்ளிகளைக் கொண்டதா? அது  எப்படி?"

எனக்கு தெரிதாவின் 'வேறபாடுகள்' (Differance)தான் நினைவில் வந்தது. பல வேறுபாடுகள் ஒன்றின் ஒன்றாகப் பொதிந்து பலநிலைப் பொருட்களைத் தரும் வகை உருவாவதாக ஒரு நோட்டில் பல உட்பொதிவுகள் உருவாகின்றன என்பதாக நினைத்துக்கொண்டேன்.

"ஒரு பியானோவில் ஒரு கட்டையைத் தட்டிப் பார்த்தால்...அல்லது காலில் தட்டக்கூடிய அந்தக் கொக்கியைத் தட்டினால் அது 'ங்;.......'  என்று ஒலிக்கும். அதை ஒரு தடவை தட்டினால் கணக்குப்படி அது ஒரு நோட். ஆனால் அழுத்திக்கொண்டேயிருந்தால் அது பிறப்பிக்கும் இசை எத்தனை இசை உட்பொதிவுகளைத் தந்துகொண்டேயிருக்கும் என்பதைக் கற்பனை செய்ய முடிகிறதா?" ஆனால் அதுவும் அந்த ஒரேயொரு நோட்தான்"

தேவாயலங்களில் வாசிக்கப்படும் பியானோக்களின் இத்தகு ஒலியை எப்போதாவது கேட்டது நினைவில் விழுந்தது.  தற்போது மீள்வாங்கிப் பார்த்தேன். அவர் சொன்து சரியாகத்தான் பட்டது.

இப்போது வண்டி பெருவழியைவிட்டு துணை வீதிகளுக்கு வந்திருந்தது.

"நீ என் இந்தத் தொழிலிற்கு வந்தாய்...?" விளக்கில் வண்டி நின்றதும் கேட்டார்.

"படிக்கலாம். பகுதிநேரமாக வாய்ப்புக் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாளுக்குப் 14 மணிநேரத்தை விழுங்குகிறது"

"உனக்கு போரடிக்கவில்லையா"

"இல்லை. மிகவும் வாய்ப்பாக இருக்கிறது. எனது மொழியில் கதைகள் எழுதலாம் போல இருக்கிறது."

"ஆ! நீ அப்ப ஜர்னல் எழுதுகிறாயா?"

அப்போதுதான் பட்டது....இப்படி எழுதினால் என்ன? ஓரு மெமுவார் பாணியில் தொடர்ந்து இதை எழுதலாமே என்று நினைத்தேன்.

"நீ இசைக்கோர்வை என்பதை இசையில் மட்டும் உள்ளதாக நினைக்காதே. ஒரு நோட்டில் பல ஒலிப்புக்களும் இசை உட்பொதிவுகளும் உள்ளது போல உனது ஒரு நாளில் நீ பலவற்றைச் சந்திப்பாய். அவற்றைத் தொடர்ந்து ஜர்னலாக்கினால் அது எப்போதோ என்றோ பல நோட்கள் சேர்ந்த ஓர் இசைக் கோர்வையாக  - அதைப்போல - வந்து சேரலாம்"

தனது இடத்தில் இறங்கும்போது "மீண்டும் சந்தித்தால் மகிழ்ச்சி! ஓர் இசைக்கோர்வை ஒலிக்கும் வண்டியில்" என்றுவிட்டுப் போனார்.


இது நேற்று.

இன்று - கடந்த இரவு - பல சம்பவங்கள் நடந்தது. அவை கெட்ட கனவுகள் போன்றன. இரவில் வண்டிஓட்டுவதால் எந்த நாளின் இரவுக்கு எனது வேலை நாளைப் பொருத்துவது என்ற குழப்பம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இன்றைக்கு என்ன நாள் - தேதி என்றால் பதில் தெரியாதே இருக்கும்.

12.30 மணியளவில் நடந்து முடிந்த சம்பவங்களில் மீள ஓர் நீண்ட இடைவேளையை எடுத்துக்கொண்டேன். எனக்கு பிடித்தமான தேனீர்ச் சாலையை நோக்கி ஓடினேன். ஆறி, முகம் கழுவி, தேனீர் குடித்து வெளியேறினேன். சிலவேளைகளில் அதிகம் சீனி கலந்த பாலுடனான தேனீர் மதுவுக்குச் சமமாக இருக்கும். இருக்கும் தலையிடியில் இருந்து மீள மது நல்லம் போல பட்டது. மதுவுடன் வண்டி ஓட்ட நான் இருக்கும் நாட்டின் மாகாணத்தில் தடை உண்டு. அதனால் மதுவுக்குப் பதில் அதிகம் சர்க்கரைபோட்டு பாலுடன் ஓர் தேனீரைச் சூடாக அருந்தினேன். இது ஒரு பழிவாங்கல் நடவடிக்கைபோலப் பட்டது.


ஒன்றரை மணிநேரம் கடந்தபின்னர் வாடகை வண்டி நிறுத்தத்தில போய் நின்று ஒரு ஓட்டத்தைப் பெற்றேன். அந்த ஓட்டத்தில் வந்தவர்கள் நடந்துகொண்டதும் -  நடந்து முடிந்த, கடந்த சம்பவங்கள் போலவே கொடுமையாய் இருந்தது.

என்னடா இது? இன்று - வெள்ளிக்கிழமை - அனைத்துப்பேரும் 'பார்க'ளுக்குச் செல்லும், வாடகை வண்டி ஓட்டுவோருக்கு மிகவும் உழைப்பைத் தரும் நாளில் - மிகவும் குளிரான நாளாகவும் இருப்பதால் தவிர்க்கமுடியாதபடி வாடகை வண்டியில் தாவிக்குதிக்கும் நாளாகவும் இருப்பதால் - பல மணிகள் இப்படி வீணாகிறதே என்று சலித்துக்கொண்டு மீள வழிதேடினேன்.

நடுச்சாமம் தாண்டியபின் வழித்திருப்போர் பட்டியலில் முதலில் உள்ளவர் அருண்மொழிவர்மன். அவருக்கு தொலைபேசி ஆறுதலுக்காக நடந்த நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டேன்.  பல மணித்துளிகளின் பின் அவர் 'இவற்றை எல்லாம் ஓர் பதிவாக தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்குமே...இந்த பதிவுகளைக் கொண்டுவருவது அனைத்து வாடகை வண்டி ஓட்டுவோருக்கும் சாத்தியமிருக்காது....' என்றார்.

கதைகளாக எழுதுவோம் என்பவை 'மெமுவார்களாக' ஆகிய கதை இதுதான்.

இனித் தொடர்ந்து எழுதிப்பார்க்கலாம்.

மறுநாள் நடந்த கதை - அருண்மொழிவர்மனிடம் சொன்னகதை-கள் எனக்கு மனச்சோர்வைத் தந்திருந்தாலும் கொஞ்சம் சுவையானவையும் தொடர்ந்து எழுதினால் வாசிக்கப் பலமுகங்களைக் கொண்டவையும்தான் என நினைக்கிறேன்.