I am a part of the Universe, try to find is there a parallel. பெருவெளியின் பகுதியாய் ...

சனி, பிப்ரவரி 21, 2015

வாடகைக்கார் தேவதைகள் - நாட்குறிப்பு 1


வாடகைக்கார் தேவதைகள் - நாட்குறிப்பு 1


பட்டறிவுகளைத் தொடராக எழுதும் எண்ணம் நேற்று வரை வந்ததில்லை.

நேற்று - இரவு - முதல்நாள் வாடகை வண்டியில் ஏறிய ஒருவர் ஓர் இசைக்கருவியுடன் வந்தார்.  ரொரன்ரோவின் ஒரு பெரிய ஓட்டல் வாசலில் தொற்றிக்கொண்டவர்.  இசைக்கருவிகள் சில அவை பெட்டியுள் இருக்கும்போது மயக்கமான தோற்றத்தைத்தரும். எனது வண்டியில் 96.3 பண்பலை போய்க்கொண்டிருந்தது. இது ரொரன்ரோப் பகுதிகளில் செவ்வியல் இசைக்கோர்வைகளை ஒலிபரப்பும் அலைவரி.

"இது என்ன இசைக்கருவி என்பதைக் கேட்டால் நீங்கள் ஒன்றும் நினைக்க மாட்டீர்களே?" என்று கேட்டுவைத்தேன்.

"அப்படியொன்றுமில்லை. இது சக்ஸஃபோன்"

"ஓ! அப்படியா? இங்க பாருங்கள். எனது மற்றைய விருப்பமான அலைவரிசை இதுதான்"  என்று ரொரன்ரோவின் 91.1 பண்பலை வரிசையைத் தட்டிவிட்டேன். இது ஜாஸ் இசைக்கென்று தனிச்சிறப்பாக இயங்கும் அலைவரிசை. ஜாஸ் இசையின் அடி நாதமே சக்ஸஃபோன்தான் என்பது அனவைருக்கும் தெரிந்திருக்கும்.

வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போது கண்ணாடியில் பயணிகளைப் பார்ப்பது பண்பல்ல என்ற விதியை வைத்திருக்கிறேன். அவரை ஓர் சிவப்பு விளக்கில் திரும்பிப் பார்த்தேன். புன்னகைத்தார்.

"இது ஆச்சரியம். ரொரன்ரோவின் வாடகை வண்டி ஒன்றில் செவ்வியல் இசையையும் விட்டால் ஜாஸ் ஐயும் கேட்பது ஆச்சரியம். நீ ( 'யூ' என்பதை ஆங்கிலத்தில் - பேச்சில் பயன்படுத்துவதை எப்படி மொழிமாற்றுவது என்பது பலநாள் போராட்டம். இந்த இடத்தில் நீயாகலாம்.) கொஞ்சம் விசயம் தெரிந்த ஆளாக இருக்கவேண்டும். அல்லது படித்திருக்கிறாய் என நினைக்கிறேன்."  தொடர்ந்து "ஒரு ஆள் கேட்கும் இசையை வைத்தே அவரின் அறிவின் திறத்தை அளவிடமுடியும்." என்றார்.

"அப்படி எப்படிச் சொல்லலாம். நாட்டார் இசைகள் பல இருக்கின்றன. அவற்றை வைத்துக்கொண்டு இசை சார் மக்களை எடைபோட முடியுமா?. செவ்வியல் இசைமட்டுமா உன்னதம்?"

"நான் ஓர் இசை ஆசிரியன். ஒரு தனியார் கல்லூரியில் இசை பயிற்றுவிக்கிறேன். ம்! இசை படிப்பித்தல் பயிற்றுவித்தல் - கல்லூரி - இதெல்லாம் தொடர்பற்றவை" சலித்துக்கொண்டார் என நினைக்கிறேன். "எனக்குத் தெரியும். நீ சொல்வது சரிதான். இசைக் கேட்பை மட்டும் வைத்து ஆட்களை வகைப்படுத்துவது பாகுபாடு காட்டுவதாகும்தான். ஆனாலும் சில வகை இசைகள்...." தொடரந்தார்.... "எப்படி இந்த வேலைக்கு வந்தாய்?"

சுருக்கமான அண்மைக்கால வரலாற்றைச் சொன்னேன்.

"உன்னைக்கொண்டு இந்த இடத்தில் சேர்த்ததற்காக கனடாவை நீ கோபப்படவில்லையா?"

"எப்படி? நாம்தான் தேர்ந்தெடுத்து வருகிறோம் - பாதுகாப்பான சொர்க்கம் என்கிறோம். கனடாவில் நான் மகிழ்வாயில்லை என்பது ஒரு தலைப்பட்சமாகத்தான் இருக்கும். குடும்பத்தில் இருந்துகொண்டு ஒருவர் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அல்லது குடும்பத்தில் மகிழ்ச்சியாய் இல்லை என்று கறுப்பு வெள்ளையாகச் சொல்ல முடியுமா?"
taxi stories toronto taxi driver memoire


இப்படிப் பேச்சு போனது. வாடகை வண்டி ஓட்டுபவர் மிகச் சிலரோடுதான் இவ்வாறு உரையாடிக்கொள்ளமுடியும். மற்றப்படி வடகை வண்டி ஓட்டுபவருக்கு உயிரும் மூளையும் இருப்பதாக ரொரன்ரோவில் யாரும் நினைப்பதில்லை என்பதையும் நினைவூட்டுவது என்கடமை.

"வாடகை வண்டியில் ஜாஸ் நம்பமுடியவில்லை" என்றார்.

"அய்யா! இதெல்லாம் எதற்கு? இந்த சிறிய பயணத்தில் இசைபற்றி ஏதாவது எனக்குச் சொல்லுங்களேன்! முடியுமானால், விருப்பமானால்"

"நான்தான் சொன்னேனே! நான் ஓர் இசை ஆசிரியன் என்று. உனக்கு என்ன அறிய வேண்டும்."

நாங்கள் போய்க்கொண்டிருக்கும் பயணம் அதிகம் போனல் மேலும் 10 நிமிடங்கள் இன்னும் எடுக்கலாம்.

"எப்படி இசையை ரசிப்பது என்று எனக்குச் சொல்லுங்களேன்"

"நீ ஏன் இந்த செவ்வியல் - ஜாஸ் கேட்கிறாய். நீ இசைக்கருவிகள் ஏதும் வாசிப்பாயா?"

"இல்லை. தமிழ்ப் புலத்தில் அந்தக்காலத்தில் இருந்தவர்கள் தந்த தேடல் உந்துதல்...பிறகு எனது நாட்டில் இருக்கும் ஓர் சிறந்த இசையமைப்பாளர் - இன்று 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார் - இளையராஜா என்பவர் - இங்கு ரொரன்ரோவிலும் வந்து இசைநிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்....இவையெல்லாம் சேர்ந்து இங்கு தள்ளிவிட்டது."

"அப்படியா? என்ன அறியவேண்டும்."

"இசையின் அடிப்படை என்ன?"

"இசை என்ற சொல் எப்படி உருவானது என்று தெரியுமா?"

"இல்லை....ஏதாவது கிரேக்க தோற்றமா?"

"கிட்டமுட்ட அப்படித்தான்.  Mu என்பது தயார் என்பதைக் குறிக்கும். Sico என்பது அறிவைக் குறிக்கும். அறிவின் தாய் என்பது இதன் பொருள்" என்றார். எவ்வளவு சரியோ "... அப்படியா ஆச்சரியம்" என்றேன். Reference

பைதோகரஸ்...இசைக்கவர்...ஒத்திசைவு.... என்று பலவற்றைச் சொன்னார். சொல்லும்போதே "இதில் எவ்வளவை நீ உள்ளெடுக்கிறாய் என்பது தெரியவில்லை. இது இயற்பியலோடு - பௌதீகத்தோடு தொடர்புடையது. நான்தான் சொன்னேனே... இசை ஓர் அறிவியல் என்று".

"எனக்கு கொஞ்சம் அறிவியல் பின்புலம் உண்டு. ஒரே சுரங்களில் இசையும் இரு கம்பிகள் அல்லது கருவிகள் ஒத்திசையும் என்பதை படித்திருக்கிறேன். ஆய்வுக்கூடத்தில் செய்து பார்த்திருக்கிறேன்" என்றேன்.


"அப்படியானால் நான் உனக்கு மற்றொன்றைச் சொல்கிறேன்"

"இசையில் தட்டப்படும் ஒரு புள்ளிக்கு 'நோட்' என்று பெயர். அது எந்த நோட்டாய் இருக்கட்டும். நாம் அதை வருடுகிறோம் அல்லது தட்டுகிறோம் என்று வைப்போமே...அப்போது அது ஒரு நோட்தான். ஒரே யொரு நோட்தான். ஆனால் அது உள்ளே பல நோட்களைக் கொண்டது"

"எனக்குத் தெரியாத இசை உண்மையிது. பலதடவை எத்தனையோ வகை இசைக் கேட்டிருக்கிறோம். ஆனால் ஓர் புள்ளி பல புள்ளிகளைக் கொண்டதா? அது  எப்படி?"

எனக்கு தெரிதாவின் 'வேறபாடுகள்' (Differance)தான் நினைவில் வந்தது. பல வேறுபாடுகள் ஒன்றின் ஒன்றாகப் பொதிந்து பலநிலைப் பொருட்களைத் தரும் வகை உருவாவதாக ஒரு நோட்டில் பல உட்பொதிவுகள் உருவாகின்றன என்பதாக நினைத்துக்கொண்டேன்.

"ஒரு பியானோவில் ஒரு கட்டையைத் தட்டிப் பார்த்தால்...அல்லது காலில் தட்டக்கூடிய அந்தக் கொக்கியைத் தட்டினால் அது 'ங்;.......'  என்று ஒலிக்கும். அதை ஒரு தடவை தட்டினால் கணக்குப்படி அது ஒரு நோட். ஆனால் அழுத்திக்கொண்டேயிருந்தால் அது பிறப்பிக்கும் இசை எத்தனை இசை உட்பொதிவுகளைத் தந்துகொண்டேயிருக்கும் என்பதைக் கற்பனை செய்ய முடிகிறதா?" ஆனால் அதுவும் அந்த ஒரேயொரு நோட்தான்"

தேவாயலங்களில் வாசிக்கப்படும் பியானோக்களின் இத்தகு ஒலியை எப்போதாவது கேட்டது நினைவில் விழுந்தது.  தற்போது மீள்வாங்கிப் பார்த்தேன். அவர் சொன்து சரியாகத்தான் பட்டது.

இப்போது வண்டி பெருவழியைவிட்டு துணை வீதிகளுக்கு வந்திருந்தது.

"நீ என் இந்தத் தொழிலிற்கு வந்தாய்...?" விளக்கில் வண்டி நின்றதும் கேட்டார்.

"படிக்கலாம். பகுதிநேரமாக வாய்ப்புக் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாளுக்குப் 14 மணிநேரத்தை விழுங்குகிறது"

"உனக்கு போரடிக்கவில்லையா"

"இல்லை. மிகவும் வாய்ப்பாக இருக்கிறது. எனது மொழியில் கதைகள் எழுதலாம் போல இருக்கிறது."

"ஆ! நீ அப்ப ஜர்னல் எழுதுகிறாயா?"

அப்போதுதான் பட்டது....இப்படி எழுதினால் என்ன? ஓரு மெமுவார் பாணியில் தொடர்ந்து இதை எழுதலாமே என்று நினைத்தேன்.

"நீ இசைக்கோர்வை என்பதை இசையில் மட்டும் உள்ளதாக நினைக்காதே. ஒரு நோட்டில் பல ஒலிப்புக்களும் இசை உட்பொதிவுகளும் உள்ளது போல உனது ஒரு நாளில் நீ பலவற்றைச் சந்திப்பாய். அவற்றைத் தொடர்ந்து ஜர்னலாக்கினால் அது எப்போதோ என்றோ பல நோட்கள் சேர்ந்த ஓர் இசைக் கோர்வையாக  - அதைப்போல - வந்து சேரலாம்"

தனது இடத்தில் இறங்கும்போது "மீண்டும் சந்தித்தால் மகிழ்ச்சி! ஓர் இசைக்கோர்வை ஒலிக்கும் வண்டியில்" என்றுவிட்டுப் போனார்.


இது நேற்று.

இன்று - கடந்த இரவு - பல சம்பவங்கள் நடந்தது. அவை கெட்ட கனவுகள் போன்றன. இரவில் வண்டிஓட்டுவதால் எந்த நாளின் இரவுக்கு எனது வேலை நாளைப் பொருத்துவது என்ற குழப்பம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இன்றைக்கு என்ன நாள் - தேதி என்றால் பதில் தெரியாதே இருக்கும்.

12.30 மணியளவில் நடந்து முடிந்த சம்பவங்களில் மீள ஓர் நீண்ட இடைவேளையை எடுத்துக்கொண்டேன். எனக்கு பிடித்தமான தேனீர்ச் சாலையை நோக்கி ஓடினேன். ஆறி, முகம் கழுவி, தேனீர் குடித்து வெளியேறினேன். சிலவேளைகளில் அதிகம் சீனி கலந்த பாலுடனான தேனீர் மதுவுக்குச் சமமாக இருக்கும். இருக்கும் தலையிடியில் இருந்து மீள மது நல்லம் போல பட்டது. மதுவுடன் வண்டி ஓட்ட நான் இருக்கும் நாட்டின் மாகாணத்தில் தடை உண்டு. அதனால் மதுவுக்குப் பதில் அதிகம் சர்க்கரைபோட்டு பாலுடன் ஓர் தேனீரைச் சூடாக அருந்தினேன். இது ஒரு பழிவாங்கல் நடவடிக்கைபோலப் பட்டது.


ஒன்றரை மணிநேரம் கடந்தபின்னர் வாடகை வண்டி நிறுத்தத்தில போய் நின்று ஒரு ஓட்டத்தைப் பெற்றேன். அந்த ஓட்டத்தில் வந்தவர்கள் நடந்துகொண்டதும் -  நடந்து முடிந்த, கடந்த சம்பவங்கள் போலவே கொடுமையாய் இருந்தது.

என்னடா இது? இன்று - வெள்ளிக்கிழமை - அனைத்துப்பேரும் 'பார்க'ளுக்குச் செல்லும், வாடகை வண்டி ஓட்டுவோருக்கு மிகவும் உழைப்பைத் தரும் நாளில் - மிகவும் குளிரான நாளாகவும் இருப்பதால் தவிர்க்கமுடியாதபடி வாடகை வண்டியில் தாவிக்குதிக்கும் நாளாகவும் இருப்பதால் - பல மணிகள் இப்படி வீணாகிறதே என்று சலித்துக்கொண்டு மீள வழிதேடினேன்.

நடுச்சாமம் தாண்டியபின் வழித்திருப்போர் பட்டியலில் முதலில் உள்ளவர் அருண்மொழிவர்மன். அவருக்கு தொலைபேசி ஆறுதலுக்காக நடந்த நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டேன்.  பல மணித்துளிகளின் பின் அவர் 'இவற்றை எல்லாம் ஓர் பதிவாக தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்குமே...இந்த பதிவுகளைக் கொண்டுவருவது அனைத்து வாடகை வண்டி ஓட்டுவோருக்கும் சாத்தியமிருக்காது....' என்றார்.

கதைகளாக எழுதுவோம் என்பவை 'மெமுவார்களாக' ஆகிய கதை இதுதான்.

இனித் தொடர்ந்து எழுதிப்பார்க்கலாம்.

மறுநாள் நடந்த கதை - அருண்மொழிவர்மனிடம் சொன்னகதை-கள் எனக்கு மனச்சோர்வைத் தந்திருந்தாலும் கொஞ்சம் சுவையானவையும் தொடர்ந்து எழுதினால் வாசிக்கப் பலமுகங்களைக் கொண்டவையும்தான் என நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக